donald trump reuters
உலகம்

நீங்க வாங்கக் கூடாது..ஆனா நாங்க வாங்குவோம்! ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் அமெரிக்கா!

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த அமெரிக்கா, தற்போது ரஷ்யாவிடமிருந்து பெருமளவில் எரிபொருளை இறக்குமதி செய்ய உள்ளது தகவல் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து 2022 ஆண்டு முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. பல்வேறு அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், நான்கு ஆண்டுகளைக் கடந்தும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யாவின் தாக்குதல்களுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது உக்ரைன். போர் தொடங்கியதிலிருந்தே உக்ரைனுக்கு ஆயுதங்கள், நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அமெரிக்கா ஆதரவளித்து வருகிறது.

ukraine attack russia oil sources

ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த, அந்நாட்டின் வருவாயைக் குறைக்க வேண்டும் என்றும், அதன் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கேற்ப, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வந்தார். இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றது.

ஆனால், தற்போது இந்த நிலைப்பாட்டுக்கு மாறாக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து டீசல் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிவித்துள்ள டிரம்ப், அமெரிக்காவில் டீசல் விலை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தவும், உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை உதவும் எனத் தெரிவித்துள்ளார். இதற்காக, ரஷ்ய டீசல் இறக்குமதிக்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கியுள்ளதாகவும், ரஷ்யா உடனடியாக 3 லட்சம் டன்களுக்கும் அதிகமான டீசலை வழங்கும் என்றும், தொடர்ந்து வரும் மாதங்களிலும் கூடுதல் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Crude oil

ரஷ்யாவுக்கு எரிபொருள் விற்பனை மூலம் கூடுதல் வருவாய் கிடைத்தால், அந்த நிதி உக்ரைன் போருக்குப் பயன்படுத்தப்படலாம் என்று ஜெலென்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதார அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த அமெரிக்காவே, தற்போது அந்நாட்டிடமிருந்து எரிபொருள் வாங்குவது அதன் கொள்கை அணுகுமுறை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த முடிவு தற்காலிகமானதா அல்லது அமெரிக்காவின் ரஷ்யா தொடர்பான கொள்கையில் ஏற்படவுள்ள மாற்றத்திற்கான அறிகுறியா என்பதுதான் தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.