நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியாவும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, நேற்றுடன் (நவ.19) ஆயிரம் நாட்களைக் கடந்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசாங்கம், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவினுள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்த ரஷ்யாவும், உக்ரைனுக்கு எதிராக பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்த புடின் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் இருநாடுகளுக்கிடையேயான இந்தப் போர் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. முக்கியமாக, அமெரிக்கா அனுமதி அளித்ததைத் தொடர்ந்து உக்ரைன், நேற்று இரவே 6 நீண்டதூர ஏவுகணையை ரஷ்யாவின் பல பகுதிகளில் ஏவி, தாக்குதல் நடத்தியது. இதில் 5 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதையடுத்து, பதிலுக்கு ரஷ்யாவும் தாக்குதல் நடத்தும் என்பதால், உக்ரைனில் உள்ள அமெரிக்கா தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் 275 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுத உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்பட அதிநவீன ஆயுதங்களும் அடக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரஷ்யாவுடனான போர் தொடங்கியது முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத உதவி 51 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிகளவு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்காவே முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான உலகப் பொருளாதாரத்திற்கான கீல் கழகத்தின் தகவலின்படி, "2022 பிப்ரவரி போரின் தொடக்கத்திற்கும் ஜூன் 2024 இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், உக்ரைனுக்கு 55.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அனுப்புவதற்கு அமெரிக்கா உறுதியளித்தது" என தெரிவித்துள்ளது.
ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ பைடன், அதற்குள் உக்ரைனுக்கான உதவிகளை விரைவுபடுத்த முயன்று வருகிறார் என பேச்சுகளும் எழுந்துள்ளன. அதன் காரணமாக, இத்தகைய பெரிய தொகையை உக்ரைனுக்கு விடுவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னர், இத்தகைய தொகையை விடுவிக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது. முன்னதாக, உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.
போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதன்படியே, இத்தொகை பகிரப்பட்டு வருகிறது. காரணம், அதிபராகப் பதவியேற்கவுள்ள ட்ரம்ப் நிர்வாகம் போர் நிறுத்தத்தையே பெரிதாக விரும்புகிறது. மேலும், அமெரிக்க ராணுவ கட்டமைப்பைத்தான் பலப்படுத்த விரும்புகிறது. இதனால், போர் நடைபெறும் பிற நாடுகளுக்கு நிதியுதவி அளிக்கவோ அல்லது ஆயுத உதவி வழங்கவோ அவ்வரசுக்கு விருப்பமில்லை. இதை, அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ட்ரம்ப் உறுதியாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.