உலகம்

சுயநினைவை இழந்த விமானி.. ஆபத்தான நேரத்தில் பயணி செய்த மேஜிக்! நடுவானில் நடந்தது என்ன?

ச. முத்துகிருஷ்ணன்

நடுவானில் விமானிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, விமானம் பற்றி ஏதுமறியாத பயணி ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார்.

பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரான ராபர்ட் மோர்கன் ஓய்வில் இருந்தபோது அவருக்கு பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து அழைப்பு வந்தது. அந்த விமானத்தில் விமானி ஒருவரும், இரு பயணிகளும் இருந்தனர். அப்போது பேசிய பயணி டேரன் ஹாரிசன் “இங்கே ஒரு மோசமான சூழ்நிலை உள்ளது. விமானி சுய நினைவில்லாமல் உள்ளார். விமானத்தை எப்படி ஓட்டுவது என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூற மோர்கன் பதறிப்போனார்.

“சிங்கிள் எஞ்சின் கொண்ட செஸ்னா 280 இன் நிலை உங்களுக்குத் தெரியுமா?” என்று மோர்கன் கேட்க, அதற்கு பயணி ஹாரிசன் , “எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு முன்னால் புளோரிடா கடற்கரையைப் பார்க்க முடிகிறது. அவ்வளவு தான்” என்று கூறினார்.

பின்னர் மோர்கன் “சிறகுகளின் அளவை கவனியுங்கள். வடக்கு அல்லது தெற்கே கடற்கரையைப் பின்தொடர முயற்சிக்கவும். நாங்கள் உங்கள் விமானத்தை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார். இந்நிலையில் அடுத்த சோதனையாக விமானத்தை இயக்கத் துவங்கிய பயணியின் குரல் மங்கத் தொடங்கியது. சிறந்த தகவல் தொடர்புக்காக பயணியின் மொபைல் ஃபோனின் எண்ணைக் கேட்டுத் தொடர்பு கொண்டார் மோர்கன்.

பின்னர் ரன்வேயின் சரியாக தரையிறக்க மோர்கன் வழிமுறைகளை ஒவ்வொன்றாக கூற, அதை சரியாக பின்பற்றி விமானம் புளோரிடா பாம் பீச் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. தரையிறங்கியபின் பயணியிடம் பேசிய மோர்கன் “புதிய விமானிக்கு பாராட்டுக்கள்” என்று அறிவித்தார். பின்னர் ஹாரிசனை தேடிச் சென்று சந்தித்த மோர்கன் அவரை கட்டியணைத்து வாழ்த்துகளை தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் உடனடியாக தெரிவிக்கவில்லை. சம்பவம் தொடர்பாக அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.