கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பேசப்படுகிறது.
இந்த நிலையில் இணைய வர்த்தக உலகில் முன்னணி நிறுவனமான அமேசானும் மீண்டும் ஆட்குறைப்புப் பணியில் ஈடுபட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அமேசான், உலகம் முழுவதும் தனது அலுவலகங்களை விரித்துள்ளது. அந்த வகையில், கனடாவின் கியூபெக் மாகாணத்திலும் அமேசானுக்கு நிறைய கிளை அலுவலகங்கள் உள்ளன. இந்த நிலையில், அங்குள்ள பல கிளைகள் நஷ்டத்தில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு, அங்குள்ள அனைத்து அலுவலங்களையும் மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு வேலை பார்த்து வரும் 1,900 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இத்தகைய நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கனடா தொழில் துறை அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
Laval அமைப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தின் தலைவரான Caroline Senneville, இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தச் செயல் ஊழியர்களின் முகத்தில் அறைந்தது போன்று உள்ளது. அமேசான் நிறுவனம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. நமது உரிமைக்காக துணை நிற்க நாம் ஒருபோதும் தயங்கக் கூடாது. சட்டரீதியாக இந்தப் பிரசனையை எதிர்கொள்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பணிநீக்க ஊழியர்கள் எண்ணிக்கை 2,000க்கும் மேல் இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்க நாடான கனடா, தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. பல்வேறு தவறான முடிவுகளை மேற்கொண்டதன் விளைவாக, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கனடா கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.