உலகம்

புத்தர் கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 86 புலிகள் உயிரிழப்பு

webteam

தாய்லாந்து புத்தர் கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளில் 86 புலிகள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தாய்லாந்தின் காஞ்சனாபுரி பகுதியில் உள்ள புத்தர் கோவிலில் ஏராளமான புலிகள் வளர்க்கப்பட்டன. புலிகள் கோவில் என்று அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனிடையே கோவிலில் வளர்க்கப்படும் புலிகள் இயற்கைக்கு மாறாக இனப்பெருக்கம் செய்யப்படுவதாகவும், புலிகளின் உடல் பாகங்கள் சட்ட விரோதமாக விற்கப்படுவதாகவும் பெரும் சர்ச்சை எழுந்தது. இதனை அடுத்து கடந்த 2016ம் ஆண்டு தாய்லாந்து போலீசார் புத்தர் கோவிலில் பெரும் சோதனை நடத்தினர். 

அங்கிருந்த 147 புலிகள் மீட்கப்பட்டு உயிரின பூங்காங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் புத்தர் கோவிலில் இருந்து மீட்கப்பட்ட 147 புலிகளில் 86 புலிகள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறை புத்தர் கோவிலில் புலிகள் வனச்சூழலில் வளர்க்கப்படவில்லை என்றும், அதனால் வாழ்விடம் மாறியதால் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி புலிகள் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் இறப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள புத்தர் கோவில் நிர்வாகம், கோவிலில் ஆரோக்யமான சூழலில் புலிகளை வளர்த்தோம்.ஆனால் உயிரின பூங்காக்களுக்கு கொண்டு செல்லப்பட்ட புலிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. புலிகள் குறித்து புரிதல் இல்லாததாலும், அக்கறை இல்லாததாலும் புலிகள் இறந்துள்ளன. இதற்கு வனத்துறையே முழுப்பொறுப்பு என தெரிவித்துள்ளது.