உலகம்

நேபாள விமான விபத்து: 5 இந்தியர்கள் உட்பட விமானத்திலிருந்த 72 பேரும் பலியான சோகம்

PT

நேபாள நாட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டில் காத்மாண்டுவில் இருந்து 72 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள் விமானம், பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 5 இந்தியர்கள் உள்பட விமானத்தில் இருந்த 72 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு சில நொடிகள் முன்னர் விமானத்தில் பயணித்த பயணி எடுத்த லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

(குறிப்பு: இந்த வீடியோவின் உண்மைத்தன்மை உறுதிசெயப்படவில்லை)

இந்த நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேபாள விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கையை 45 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு அந்நாட்டு பிரதமர் புஷ்பா கமல் தஹல் உத்தரவிட்டுள்ளார். விமானத்தில் இருந்த 5 இந்தியர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

அபிஷேக் குஷ்வாகா, பிஷால் சர்மா, அனில்குமார் ராஜ்பர், சோனு ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சயா ஜெய்ஸ்வால் ஆகிய அந்த 5 இந்தியர்களின் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், அவர்களில் 4 பேர் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்கள் சுற்றுலா நிமித்தமாக நேபாளம் சென்றதும் தெரிய வந்துள்ளது. இதில், சோனு ஜெய்ஸ்வால் தனது விமான பயண அனுபவத்தை முகநூல் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இதில் சோனு ஜெய்ஸ்வால் மதுபான வியாபாரியாகவும், அனில்குமார் ராஜ்பர் மற்றும் அபிஷேக் குஷ்வாகா ஆகியோர் சேவா மையங்களை நடத்திவருவதாகவும், பிஷால் சர்மா இருசக்கர ஏஜென்ஸி நிறுவன்ம் ஒன்றில் நிதி அதிகாரியாகவும் பணிபுரிந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நேபாள விமான விபத்தில் இறந்தவர்களின் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களிக் கொண்டு வரும்படி அலுவலர்களுக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், "நேபாளத்தில் நடந்த விமான விபத்தானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்கள் உட்பட அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் உடலை இங்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.