உலகம்

துண்டு சீட்டில் ஐன்ஸ்டீன் எழுதிய குறிப்பு ரூ.10 கோடிக்கு ஏலம்

webteam

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய குறிப்புகள் அடங்கிய இரு துண்டு சீட்டுகள் சுமார் 10 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

இஸ்ரேல் தலைநகர் ஜெருசேலத்தில் ‌அந்த துண்டு சீட்டுகள் ஏலம் விடப்பட்டன. அதை எடுத்தவர் யார் என்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 1922 ஆம் ஆண்டு ஜப்பான் சென்றிருந்த ஐன்ஸ்டீன் அங்கு தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதை யோசித்து துண்டு சீட்டில் எழுதி இருந்தார். அப்போது ஓட்டல் அறைக்கு வந்த பணியாளரிடம் டிப்ஸ் கொடுக்க பணம் இல்லாததால், அ‌ந்த சீட்டை அவரிடம் கொடுத்துள்ளார் ஐன்ஸ்டீன். வெறும் சீட்டை பார்த்து ஏமாற்றம் அடைந்த, அந்த பணியாளரிடம் இந்த சீட்டு இன்று மதிப்பு இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஒருநாள் இதற்கு மிகப் பெரிய மதிப்பு கிடைக்கும் என ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். அவரது தீர்க்க தரிசனம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடந்திருக்கிறது. வெற்றியை விட, அமைதியும் எளிமையும் தான் மனித வாழ்க்கைக்கு மகிழ்ச்சியை தேடித் தரும் என ஐன்ஸ்டீன் அந்த சீட்டில் எழுதி கையெழுத்திட்டுள்ளார்.