புடின் - ட்ரம்ப் pt web
உலகம்

அப்படியா செய்தி!! அலாஸ்காவில் புடின் பாதுகாவலர் வைத்திருந்த 'Poop Suitcase'-ல் இருந்தது இதுதானா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வெள்ளிக்கிழமை நடந்த அலாஸ்கா சந்திப்பின்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் பாதுகாவலர்கள் அவரது மலக் கழிவுகளை சேகரிக்க ஒரு "பூப் சூட்கேஸை" எடுத்துச் சென்றதாக தி எக்ஸ்பிரஸ் யுஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

PT WEB

டொனால்டு ட்ரம்பை சந்திக்க அலாஸ்கா சென்ற புடின் உடனிருந்த பாதுகாவலர்களுடன் சூட்கேஸ்கள் இருந்தது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு முன்பு கிம் ஜான் உன் போன்ற தலைவர்களும் இதுபோன்ற நடைமுறைய பின்பற்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்த அலாஸ்கா சென்ற ரஷ்ய அதிபர் புடினுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவருடன் இருந்த பாதுகாவலர்கள் சில சூட் கேஸ்களையும் கையில் பிடித்திருந்தனர். அதில் ஒன்று புடினின் மலம் சிறுநீர் ஆகிய இயற்கை உபாதைகளை சேகரித்து வைப்பதற்கான பெட்டி என அமெரிக்க நாளிதழ் கூறியுள்ளது. புலனாய்வு பத்திரிகையாளர் மூலம் இத்தகவல் தெரியவந்ததாக அப்பத்திரிகை கூறியுள்ளது.

புடினின் உடல் கழிவுகள் மூலம் அவரது உடல் ஆரோக்கியத்தை வெளிநாடுகள் தெரிந்து கொள்வதை தடுக்கவே இந்த ஏற்பாடு எனக் கூறப்படுகிறது. இந்த பெட்டி திரும்ப ரஷ்யாவிற்கே கொண்டு செல்லப்பட்டுவிட்டதாகவும் தி எக்ஸ்பிரஸ் யுஎஸ் (THE EXPRESS U S ) என்ற அந்த இதழ் கூறியுள்ளது. புடின் இதற்கு முன் வெளிநாட்டு பயணம் செல்லும் போதெல்லாம் இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் மேட்சில் எனும் பத்திரிகையில் புலனாய்வு பத்திரிகையாளர்களாக உள்ள மிகைல் ரூபின் மற்றும் ரெஜிஸ் ஜென்டே ஆகியோரை குறிப்பிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ட்ரம்ப-புடினின் சந்திப்பின் போது, புதினைப் பாதுகாக்க கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருந்தன. அவர் பாதுகாவலர்களால் சூழப்பட்டிருந்தார். மேலும், அவரையும் ரஷ்ய உளவுத்துறையையும் பாதுகாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன என அந்த இதழில் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நடவடிக்கை மே மாதம் 2017 இல் புதினின் பிரான்ஸ் பயணம் உட்பட இப்படிதான் மலக் கழிவுகளை பிரத்யேக பிரீஃப்கேஸ்களில் எடுத்துச் சென்றதாக தி எக்ஸ்பிரஸ் யுஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

புடின் - ட்ரம்ப்

மேலும், இது குறித்து தி எக்ஸ்பிரஸ் யுஎஸ் பத்திரிகையாளர் ஃபரிதா ருஸ்டமோவா கூறுகையில், 1999 ஆம் ஆண்டு தனது தலைமைத்துவத்தைத் தொடங்கியதிலிருந்து அதிபர் புடின் இந்த நடைமுறையை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

1999ம் ஆண்டுக்கு முன்பும் சில தலைவர்கள் இத்தகைய நடைமுறையை பின்பற்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், “72 வயதான அதிபரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து ஊகங்கள் எழுந்து வரும் நிலையில் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த இதழ் வெளியிட்டிருந்தது.. கடந்த நவம்பரில் கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது புடின் தனது கால்களை அசாதரணமாக அசைப்பது போல் தோன்றியதைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது குறித்து, டாக்டர் பாப் பெரூக்கிம் கூறுகையில், “இது பார்கின்சன் நோய் போன்ற ஒரு நரம்பியல் நோயாக இருக்கலாம் என்று சந்தேகித்ததாக தி எக்ஸ்பிரஸ் யுஎஸ் தெரிவித்துள்ளது” என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க
சிங்கப்பூர் சென்றிருந்தபோது கூட வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் கழிவுகள் சேகரிக்கப்பட்டு அந்நாட்டுக்கே கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.