Air India  ANI
உலகம்

ஏர் இந்தியா விமானியின் செயல்.. அதிர்ச்சி அடைந்த பயணிகள்!

பயணத்துக்கு முன்பு, ஏர் இந்தியா விமானத்தின் இணை விமானி மது அருந்திய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - கார்த்திகேயன்

சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் இருந்து டெல்லிக்கு, ஏர் இந்தியாவின் AI 151 என்ற விமானம், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி அன்று புறப்பட இருந்தது. சூரிச் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மது வாசனை வீசுவதாக, பணியாளர்கள் சிலர் கண்டுபிடித்து, அதிகாரிகளிடம் தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில், விமானத்தில் ஆய்வு செய்ததில், இணை விமானி மது அருந்தியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு, விமானத்தில் இருந்து அவர் கீழே இறக்கப்பட்டார்.

Air India

பின்னர், நடத்திய ஆரம்பகட்ட பரிசோதனையில், விமானி மது அருந்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட கூடுதல் பரிசோதனைகளிலும் அவர் தோல்வி அடைந்ததால், விமானம் திட்டமிட்டபடி இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தப்பட்டு, அந்த விமானி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து, சுவிட்சர்லாந்தின் சிவில் விமானப் போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பான கூடுதல் நடவடிக்கைகளை இந்தியாவின் ஒழுங்குமுறை ஆணையமே கவனிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், இதுபோன்ற மீறல்களைத் தவிர்க்க கடுமையான பாதுகாப்புகளைப் பலப்படுத்துமாறு ஏர் இந்தியா நிறுவனத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு முன்பு, ஏர் இந்தியாவின் விமானி ஒருவர் போதைப் பொருள் பயன்படுத்திவிட்டு விமானத்தை இயக்கியதால் பெரும் விபத்து ஏற்பட்டது.

Air India flight

இதனால், ஏர் இந்தியா நிறுவனத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்திருந்தது. இப்படியான சூழ்நிலையில், மீண்டும் இன்னொரு முறை, ஏர் இந்தியா விமானி மது அருந்தியதாக வெளியான தகவல்கள், பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால், இந்த முறை விமானத்தை இயக்குவதற்கு முன்பே, அந்த விமானி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார் என்பது, சற்று ஆறுதலான செய்தி...