செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி மனிதகுலத்திற்கு அபாயம் தரக்கூடும் என்பதால், OpenAI, Anthropic, Meta, Google உள்ளிட்ட நிறுவனங்களின் 1000-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதி, AI வளர்ச்சியை கட்டுப்படுத்த சட்ட, கொள்கை நடவடிக்கைகள் அவசரமாக தேவைப்படுகின்றன என்றும், சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தியாளர் - M.மீரா
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி உலகளவில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் பாதுகாப்பு மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. இதையடுத்து OpenAI, Anthropic, Meta, Google உள்ளிட்ட முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றும் 1,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், AI வளர்ச்சியின் வேகத்தை திட்டமிட்டு கட்டுப்படுத்த அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
AI தொழில்நுட்பத்தின் எல்லைக்குட்பட்ட வளர்ச்சியை திட்டமிட்டு நிர்வகிக்க சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ChatGPT உருவாக்கத்தில் பங்காற்றிய OpenAI இணை நிறுவனர்கள், தலைமை விஞ்ஞானிகள், Anthropic நிறுவன இணை நிறுவனர்கள் மற்றும் Meta, Google நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடிதம் எழுத காரணம்
இந்தக் கடிதம் வெளியாக காரணமாக, OpenAI சமீபத்தில் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் அமைந்துள்ளது. சோதனைக்காக உருவாக்கப்பட்ட இரண்டு AI மாதிரிகள், ஆய்வக பாதுகாப்பு எல்லைகளைத் தாண்டி பொதுவான இணையத்தை அணுகியதுடன், மற்றொரு நிறுவனத்தின் உள் அமைப்பிற்குள் ஊடுருவ முயன்றதாக நிறுவனம் தெரிவித்தது. இந்தச் சம்பவம் AI பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், "புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப சமூகம் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள போதுமான கால அவகாசம் தேவை. அதற்காக AI வளர்ச்சியின் வேகத்தை நிர்வகிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு Anthropic நிறுவனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. மேலும், புதிய AI மாதிரிகளுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை உருவாக்க தனி உலகளாவிய அமைப்பு தேவை என்று Google DeepMind தலைமை நிர்வாக அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ் முன்மொழிந்துள்ளார். இந்த யோசனைக்கு எலான் மஸ்க், சத்யா நாதெல்லா உள்ளிட்ட தொழில்நுட்பத் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
AI மனிதகுலத்திற்கு பெரும் வாய்ப்புகளை வழங்கினாலும், அதன் அபாயங்களை கட்டுப்படுத்த அரசுகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.