Data Centre web
உலகம்

ஏஐ தொழில்நுட்பத்தால் உலகளாவிய குடிநீர்ப் பஞ்சம்.. சுற்றுச்சூழல் பேரழிவு அபாயம்!

2030க்குள் உலகளாவிய தண்ணீர்p பஞ்சம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என ஐ.நா. பல்கலைக்கழகத்தின் அதிர்ச்சி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

PT WEB

ஐ.நா. பல்கலைக்கழக அறிக்கையின்படி, ஏஐ வளர்ச்சியால் தரவு மையங்களில் மின்சார நுகர்வு, கார்பன் உமிழ்வு, குடிநீர் பயன்பாடு ஆபத்தான அளவில் உயர்ந்துள்ளது. சர்வர்களை குளிர்விக்க சுத்தமான குடிநீர் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், 2030க்குள் உலகளாவிய குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; உடனடி கட்டுப்பாடுகள் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.

செய்தியாளர் - பால வெற்றிவேல் நவநீதகிருஷ்ணன்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமான ஏஐ (AI) உலகை ஆட்டுவித்துவரும் நிலையில், அதன் பின்னணியில் உள்ள தரவு மையங்கள் எனப்படும் டேட்டா சென்டர்களால் சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும் என ஐநா எச்சரித்துள்ளது. இதுகுறித்து புதிய தலைமுறையின் காலநிலை அணி வழங்கும் தொகுப்பைப் பார்க்கலாம்.

data centre

ஐ.நா. பல்கலைக்கழகத்தின் புதிய அறிக்கையின்படி, ஏஐ பயன்பாட்டால் மின்சார நுகர்வு, கார்பன் உமிழ்வு மற்றும் நீர்ப் பயன்பாடு ஆகியவை கவலைக்கிடமான அளவில் உயர்ந்து வருகின்றன. ஏஐயிடம் நாம் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பின்னணியில், பல லிட்டர் குடிநீர் வீணடிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. தரவு மையங்களில் உள்ள சர்வர்களின் வெப்பத்தைத் தணிக்கச் சுத்தமான குடிநீர் பயன்படுத்தப்படுகிறது

அதன்படி, கடந்த ஆண்டில் மட்டும் தரவு மையங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட குடிநீரின் அளவு, 60 கோடி மக்கள் ஓர் ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் தண்ணீருக்குச் சமமாகும். இது சுமார் 18 லட்சம் ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு இணையானது என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மின்சார நுகர்வைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில் உலகளாவிய தரவு மையங்கள் சுமார் 448 டெராவாட் மணி மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளன.

Data centre

இந்த அளவை ஒரு நாட்டின் நுகர்வோடு ஒப்பிட்டால், உலகிலேயே 11ஆவது மிகப் பெரிய மின்சார நுகர்வு நாடாக இந்தத் தரவு மையங்கள் விளங்கும். இந்த மின்சாரம், ஆப்பிரிக்காவில் வாழும் 130 கோடி மக்களின் 2.6 ஆண்டுகால வீட்டு மின்சாரத் தேவைக்குச் சமமானதாகும்.

2023இல் 18,900 கோடி டாலராக இருந்த உலக ஏஐ சந்தை, 2033க்குள் 5 ட்ரில்லியன் டாலராக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது. சமீபத்தில் கூகுள், ரிலையன்ஸ் நிறுவனங்களின் தரவு மையங்கள் ஆந்திராவுக்குச் சென்றதால் தமிழ்நாட்டுக்குப் பின்னடைவு என விமர்சனம் எழுந்தது.

Barren Land

ஆனால், சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர்த் தேவையின் அடிப்படையில் பார்த்தால், இது தமிழ்நாட்டுக்குச் சாதகமான ஒன்றுதான் என்றும், இதனால் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க நாடாளுமன்றத்திலும் கலிபோர்னியா மாகாணத்தின் நிலத்தடி நீர்மட்டப் பாதிப்பு குறித்துப் பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏஐ மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கினாலும், அதன் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உலக நாடுகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என ஐநா வலியுறுத்தியுள்ளது.