Zohran Mamdani x page
உலகம்

நியூயார்க் மேயர் தேர்தல் | வெற்றி உரையில் நேருவின் பேச்சு.. யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி தனது வெற்றி உரையில் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வரிகளை சுட்டிக்காட்டிப் பேசினார்.

Prakash J

நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி தனது வெற்றி உரையில் இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வரிகளை சுட்டிக்காட்டிப் பேசினார்.

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், முன்னாள் மேயர் ஆன்ட்ரூ குவோமோவை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி தோற்கடித்தார். குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர். மம்தானி 43.5% வாக்குகளைப் பெற்று, நியூயார்க் வரலாற்றின் பக்கங்களை மாற்றி எழுதியுள்ளார். தவிர, உலகம் முழுவதையும் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார். இதில் வெற்றிபெற்றதன் மூலம், 34 வயதான அவர், முதல் இஸ்லாமிய மேயர், முதல் ஆசியர், முதல் இந்திய வம்சாவளி மேயர் உள்ளிட்ட பெருமைகளைப் பெற்றுள்ளார். மம்தானின் வெற்றி, ஜனநாயகக் கட்சியின் முற்போக்கு அணியின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. நியூயார்க் மேயர் தேர்தலில் இடதுசாரி கொள்கைகளை கொண்ட மம்தானி வெற்றி பெற்றால், நியூயார்க்கிற்கு அரசு நிதி வழங்காது என அதிபர் ட்ரம்ப் என மிரட்டியிருந்தார். அந்த மிரட்டலே, மம்தானிக்கு வெற்றியைப் பரிசாகத் தந்திருக்கிறது.

வெற்றி உரையில் நேருவின் பேச்சு..

வெற்றிபெற்ற பிறகு அவர் ஆற்றிய உரையில், மறைந்த இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்திருந்தார். அப்போது பேசிய அவர், “உங்கள் முன் நிற்கும் இத்தருணத்தில் ஜவஹர்லால் நேருவின் வார்த்தைகளை நினைவுகூர்கிறேன். சில தருணங்கள் அரிதாகவே வரலாற்றில் இடம்பெறுகின்றன. பழையவற்றில் இருந்து புதிதான ஒன்றுக்கு நாம் அடியெடுத்து வைக்கும்போது, ஒரு யுகம் முடிவடையும் போது, நீண்ட காலமாக அடக்கிவைக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தின் ஆன்மா வெளிப்படும்போது அது நிகழ்கிறது. இன்றிரவு நியூயார்க் பழையதிலிருந்து புதிதான ஒன்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. அதனால் இந்த புதிய அத்தியாயம் யாருக்கு என்ன கொடுக்கும் என்பதைப் பற்றி யாரும் தவறாகப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு தெளிவுடனும், உறுதியுடனும் பேசுவோம். சாக்குப் போக்குகள் சொல்வதை விட, நாம் என்ன சாதிப்போம் என்பது பற்றிய துணிச்சலான பார்வையை மக்கள் தங்கள் தலைவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் அத்தியாயமாக இது இருக்கும். நியூயார்க் மக்கள் சாத்தியமற்றதை சாத்தியமாக்கலாம் என்ற நம்பிக்கைக்கு இடமளித்ததாலேயே நான் வெற்றி பெற்றிருக்கிறேன். அரசியல் நமக்கு ஏதாவது செய்யும் என்று எதிர்பார்த்திருந்த காலம் மாறியிருக்கிறது. அரசியலுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று இறங்கி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கிறோம்” என்றார்.

யார் இந்த ஜோஹ்ரான் மம்தானி?

உகாண்டாவின் கம்பாலாவில் அக்டோபர் 18, 1991 அன்று பிறந்தவர் ஜோஹ்ரான் மம்தானி. அவரது பெற்றோர் இருவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்: அவரது தந்தை பம்பாயில் பிறந்து உகாண்டாவில் வளர்ந்த குஜராத்தி முஸ்லிம், மற்றும் அவரது தாயார் ரூர்கேலாவில் பிறந்து புவனேஸ்வரில் வளர்ந்த பஞ்சாபி இந்து ஆவர். ’சலாம் பாம்பே’, ’தி நேம்சேக்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மீரா நாயர் மற்றும் புகழ்பெற்ற அறிஞர் மஹ்மூத் மம்தானியின் மகன் ஆவார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோது நியூயார்க் நகருக்கு அவரது பெற்றோர் குடிபெயர்ந்தனர். கானாவின் முதல் ஜனாதிபதி குவாமே நக்ருமாவின் நினைவாக அவரது தந்தை அவருக்கு "குவாமே" என்ற நடுப் பெயரைச் சூட்டினார்.

Zohran Mamdani

பிராங்க்ஸ் உயர்நிலை அறிவியல் பள்ளியின் முன்னாள் மாணவரான மம்தானி, 2014 ஆம் ஆண்டு மைனேயில் உள்ள பௌடோயின் கல்லூரியில் ஆப்பிரிக்கா ஆய்வுகளில் பட்டம் பெற்றார். அங்கு இருந்தபோது, ​​பாலஸ்தீனத்தில் நீதிக்கான மாணவர்கள் என்ற வளாக அத்தியாயத்தை இணைந்து நிறுவினார். அரசியலில் நுழைவதற்கு முன்பு, மம்தானி வீட்டுவசதி ஆலோசகராகப் பணியாற்றினார். அப்போது, புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவினார். 2020ஆம் ஆண்டில், ஐந்து முறை பதவியில் இருந்த அரவெல்லா சிமோட்டாஸை நியூயார்க் மாநில சட்டமன்றத்தில் ஒரு இடத்தைப் பெறுவதற்காக தோற்கடித்தார். 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் அவர் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவருடைய அரசியலின் வளர்ச்சியாகப் பார்க்கப்பட்டது. அதன் வளர்ச்சி, தற்போது மேயர் தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளார்.