மலாலாவைக் கொல்லப்போவதாக, ஏற்கெனவே துப்பாக்கியால் சுட்ட தலிபான் பயங்கரவாதி ட்விட்டரில் மிரட்டல் விடுத்துள்ளார்.
12 வயது இருந்த போது மலாலா ஒரு பள்ளிச்சிறுமி. அப்போதே பிபிசி உருது இணைய தளத்தில் தலிபான்களின் அராஜகம் பற்றி எழுதி உலகின் கவனத்தை பெற்றார். அதற்கு பரிசாக அவருக்கு தலிபான் கொடுத்ததுதான் துப்பாக்கிச் சூடு. அக்டோபர் 09, 2012 அன்று வழக்கம்போல பள்ளி முடிந்து, மலாலாவும் சக மாணவிகள் சிலரும் வீட்டிற்குச் செல்லும் பேருந்தில் பயணித்தனர். அந்தப் பேருந்து வழியில் ஒரு இடத்தில் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டது. பேருந்தின் உள்ளே ஏறிய தலிபான் தீவிரவாதி ஒருவன் மலாலாவை சரமாரியாக சுட்டார்.
கழுத்திலும் தலையிலும் குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த மலாலா 'ராவல்பிண்டி' ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் பாகிஸ்தான் அரசு இங்கிலாந்திலுள்ள 'பர்மிங்ஹாமின் எலிசபத்' மருத்துவமனைக்கு மலாலாவை அனுப்பியது. இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பிறகு பீனிக்ஸ் பறவையாக எழுந்து பறந்தார் மலாலா. தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அவரால் பாகிஸ்தான் திரும்ப முடியவில்லை. எனினும் சொந்த மண்ணின் நினைவுகளைச் சுமந்த படியே இங்கிலாந்தில் தனது படிப்பை தொடர்ந்தார். அவருக்கு நோபல் பரிசு கொடுத்து கவுரவம் செய்யப்பட்டது. அதன்பின்னர் மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதி எசான் 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். ஆனால் கடந்த ஆண்டு ஜனவரியில் சிறையில் இருந்து தப்பினார் எசான். அவர் சிறையில் இருந்து தப்ப பாகிஸ்தான் அரசுதான் உதவி செய்திருக்க வேண்டுமென பொதுவான குற்றச்சாட்டும் உள்ளது.
இந்நிலையில் தற்போது மீண்டும் எசானின் ட்விட்டர் பதிவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தனது ட்விட்டர் மூலம் மலாலாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதில்., உன்னுடைய சொந்த வீட்டுக்கு வா. உன்னுடனும், உன் தந்தையுடனும் முடிக்கப்படாத ஒரு வேலை உள்ளது. நாங்கள் தொடங்கியதை இந்த முறை முடிப்போம். இந்த முறை தவறாது என மிரட்டல் கொடுத்தார். பயங்கரவாதியின் மிரட்டலுக்கு பிறகு அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. பயங்கராவதியின் மிரட்டலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே அரசின் பிடியில் இருந்த தலிபான் பயங்கரவாதி எவ்வாறு தப்பித்தார் என பாகிஸ்தான் ராணுவத்திற்கும், அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கும் தனது ட்விட்டர் பக்கம் மூலம் மலாலா கேள்வி எழுப்பியுள்ளார்.