ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் உலக வர்த்தகத்தையும் அமைதியையும் அச்சுறுத்துவதாக கிறிஸ்தவ தலைவர்கள் கடுமையாக எச்சரிக்கின்றனர். கத்தோலிக்க போப் லியோவின் கண்டனத்துக்கு பின், 1,400 ஆண்டுகள் வரலாற்று சிறப்புமிக்க ஆங்கிலிகன் திருச்சபை ஆர்ச்பிஷப் சாரா முல்லாலியும் டிரம்ப்பின் போர் நடவடிக்கையை விமர்சித்துள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேலின் உதவியோடு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து இது இரு தரப்பினருக்கு இடையேயான போராக மாறிய நிலையில், இதனால் உலக அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ மத பிரிவான கத்தோலிக்கர்களின் தலைவர் போப் லியோ ஈரான் மீதான அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.
உலகம் ஒரு சில கொடுங்கோலர்களால் சீரழிக்கப்பட்டு வருவதாக அவர் கடுமையான கருத்துக்களை முன்வைத்த நிலையில், போப் தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும் என டிரம்ப்பும் பதிலுக்கு விமர்சனத்தை முன்வைத்தார்.
இருவருக்கும் இடையேயான வார்த்தைப் போர் தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், உலகின் இரண்டாவது மிகப்பெரிய கிறிஸ்தவ மத பிரிவான ஆங்கிலிகன் திருச்சபையும் டிரம்ப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலககெங்கும் உள்ள ஆங்கிலிகன் திருச்சபை தன்னிச்சையான செயல்பாட்டு அதிகாரம் கொண்டது என்றாலும், இங்கிலாந்தில் உள்ள கேன்டர்பரி ஆர்ச்பிஷப்பே இந்த திருச்சபைகளின் ஆன்மிகத் தலைவராக கருதப்படுகிறார்.
அந்த வகையில் ஆங்கிலிகன் திருச்சபையின் 1,400 ஆண்டுகால வரலாற்றில் முதல் ஆர்ச்பிஷப்பாக சமீபத்தில் பொறுப்பேற்ற சாரா முல்லாலி, ஈரானுடனான போர் பதற்றங்களைக் குறைத்து அமைதி ஏற்படுத்த வேண்டும் என்ற போப் லியோவின் கோரிக்கையைத் தானும் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் அதிகாரம் படைத்தவர்கள் அமைதியான வழியில் தீர்வுகளைக் காண வேண்டும் என்றும் ஈரான் மீது டிரம்ப் விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் அங்குள்ள சாதாரண மக்களையும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் நோயாளிகளையும் பாதிப்பதாகவும், இது கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கே எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு, டிரம்ப் ராணுவ நடவடிக்கையை நம்புவதை விட, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐநா-வுடன் இணைந்து ஈரானுடன் தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகளைமுன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் டிரம்ப் பழமைவாத கிறிஸ்தவர்களின் வாக்குகளை அதிகம் பெற்று ஆட்சிக்கு வந்த நிலையில், முக்கிய கிறிஸ்தவ மத தலைவர்களே அவரை விமர்சித்துள்ளது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.