செய்தியாளர் - M.மீரா
நாஸ்டாக் பங்குச்சந்தையில் ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனத்தின் பங்குகள் பொது விற்பனைக்கு (IPO) வந்த ஒரே நாளில், மஸ்க்கின் சொத்து மதிப்பு 14.71 சதவீதம் உயர்ந்து, சுமார் 164.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13.8 லட்சம் கோடி) அதிகரித்தது. இந்த ஒரே ஒரு நாள் லாபம், இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பை விட (89.7 பில்லியன் டாலர்) இரு மடங்கு அதிகம் என்று சொல்லப்பட்டது.
இவ்வாறு உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்த சில நாட்களிலேயே, Space X நிறுவனம் ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. வெறும் மூன்று வர்த்தக அமர்வுகளில் அந்நிறுவனம் தனது சந்தை மதிப்பில் 620 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.
இந்த இழப்புத் தொகை, இந்தியாவின் இரண்டு பெரும் தொழிலதிபர்களின், அதாவது 88.3 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்பு கொண்ட முகேஷ் அம்பானி மற்றும் 120 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட கௌதம் அதானி ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.
திங்களன்று ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பங்குகள் 16% சரிந்து 154.60 டாலர் என்ற விலையில் வர்த்தகம் நிறைவடைந்தது. இது இந்நிறுவனம் பங்குச் சந்தையில் அறிமுகமானதிலிருந்து பதிவுசெய்த மிகக் குறைந்த அளவாகும். இந்தச் சமீபத்திய சரிவு, கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து வந்த பங்கு விலை வீழ்ச்சியை 23%-ஆக அதிகரித்தது அதனால் 620 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.
ஸ்பேஸ்எக்ஸின் பிரம்மாண்டமான ஐபிஓ-வுக்குப் பிறகு சில நாட்களிலேயே இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. ராக்கெட்டுகள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய மஸ்க்கின் சாம்ராஜ்யத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் விரைந்ததால், இந்நிறுவனம் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களின் வரிசையில் விரைவாக உயர்ந்தது.
ஐபிஓ-விற்குப் பிந்தைய ஏற்றத்தின் பெரும்பகுதி சில்லறை முதலீட்டாளர்களால் இயக்கப்பட்டது. ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில் முதல் ஐந்து வர்த்தக அமர்வுகளில் சில்லறை முதலீட்டாளர்கள் $405 மில்லியன் மதிப்புள்ள ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளை வாங்கியுள்ளனர்.
இத்தகைய வலுவான பங்கேற்பு, அதன் ஆரம்ப நாட்களில் பங்கின் விலையைத் திடீரென உயரச் செய்ய உதவியது. ஆனால், சில்லறை முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் உந்தப்படும் பங்குகள், சந்தை மனநிலை மாறும் போது கடுமையான ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கக்கூடும் என்று bloomberg கூறியுள்ளது.
சந்தை மதிப்பில் 620 பில்லியன் டாலரை இழந்த பிறகும், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பங்குகள் அவற்றின் ஆரம்பப் பொதுப் பங்கு (IPO) விலையான 135 டாலருக்கும் மேலாகவே உள்ளது. இப்போதும் 2 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புடன், உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.