இறந்தவர்களின் பெயரில் மின்னஞ்சல் வாக்குப் பதிவு செய்யப்பட்டதாக, அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மீது தேர்தல் மோசடி புகார் எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்றுவிட்டார். ஜனவரி 20-க்கு மேல் அவர் பதவி ஏற்பார் எனத் தகவல் வெளியாகி வருகிறது. அதேநேரத்தில் டொனால்ட் ட்ரம்ப், தனது தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து வருகிறார் என்றும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
மேலும் அவர், "தேர்தலில் மிகப்பெரிய வாக்குப்பதிவு மோசடி நடந்துள்ளது" என்று கூறி நீதிமன்ற படியும் ஏறியிருக்கிறார். ஆனால் பைடனோ, "ட்ரம்ப் இப்படி நடந்துகொள்வது எனக்கு சங்கடத்தை தருகிறது. மிகவும் வெளிப்படையாக, இது ஜனாதிபதியின் மரபுக்கு உதவாது என்று நான் நினைக்கிறேன். ஜனவரி 20 ஆம் தேதிக்குள், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்வார்கள் என்பது ஒரு நம்பிக்கையான எதிர்பார்ப்பாகும்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ட்ரம்ப்பின் புகாரை அடுத்து, சில இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. ட்ரம்ப் தரப்பு கோரிக்கையைத் தொடர்ந்து, ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குகளும் கைகளால் மறுபடியும் எண்ணப்படும் என ஜார்ஜியா மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். ஆனால், அதிபர் ஆவதற்கு 270 தேர்வாளர்கள் வாக்குகள் தேவை என்ற நிலையில், பைடன் 290 வாக்குகளை ஏற்கெனவே பெற்றுவிட்டதால், ஜார்ஜியா மறுவாக்கு எண்ணிக்கை முடிவு அவரது வெற்றியை பாதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தற்போது ஜோ பைடன் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தலில் இறந்தவர்கள் பெயரில் அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல 'பாக்ஸ் நியூஸ்' செய்தியாளர் டக்கர் கார்ல்சன்தான் இந்த குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். அவரின் குற்றச்சாட்டு, இறந்த அமெரிக்கர்கள் வாக்கு, தேர்தல் நாளன்று செலுத்தப்பட்டது என்பதே. அதிலும் இந்த வாக்குகள் பைடனுக்குதான் சென்றுள்ளதாக புகார் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக இறந்தவர்களின் பெயர்களில் செலுத்தப்பட்ட, வாக்குப் பட்டியலை அவர் வெளியிட்டு இருக்கிறார்.
மின்னஞசல் மூலம் இறந்தவர்கள் வாக்குகள் செலுத்தப்பட்டு மோசடி நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், "அமெரிக்க வாக்கு செலுத்தும் முறையை ஜனநாயக கட்சி, இந்தத் தேர்தலில் மாற்றிவிட்டது. அமெரிக்க தேர்தல் அமைப்பு இதுவரை ஒழுங்கற்றதாக இருந்ததில்லை. மேலும், ஒருபோதும் சூழ்ச்சியால் பாதிக்கப்பட கூடாது" என்று கூறியதுடன், இந்த மோசடிகளை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் சிலர் கண்டுகொள்ளாமல், பைடனுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்று அமெரிக்க முன்னணி ஊடகங்களை கடுமையாக சாடியிருக்கிறார். இது தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.