தாலிபான் x
உலகம்

தலிபான்கள் ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவு.. ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை என்ன?

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

PT WEB

ஆப்கானிஸ்தானில் இருந்து 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தலிபான்கள் நாட்டை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அன்று தொடங்கி தலிபான்கள் கடுமையான கொள்கை ரீதியிலான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர். இதனால் 24 லட்சம் சிறுமிகள் மேல் நிலை கல்வி படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் கலாசாரத்துக்கான ஐநா முகமை வருத்தம் தெரிவித்துள்ளது. தன்னிச்சையான கைதுகள், சித்திரவதை, சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள், சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் ஆணையம் கூறுகிறது. இதனால் சர்வதேச நாடுகளின் உதவிகள் தடைபட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான்

பெரும் அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் மத்திய ஆசிய நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு கட்டமைப்பு பணிகளில் உதவி செய்துள்ளன.

இன்னொருபுறம் பாகிஸ்தான் உடனான உறவில் சிக்கல் நேரிட்டுள்ளது. சமீபத்தில், பதக்ஷான் மாகாணத்தின் ஜெபாக் பகுதியில் ஆப்கானிஸ்தான் சுதந்திர முன்னணி நடத்திய தீவிரத் தாக்குதல், தலிபான் படைகளுக்குப் பெரும் பாதுகாப்புச் சவாலாக உருவெடுத்துள்ளது. தேசிய எதிர்ப்பு முன்னணி, ஆப்கானிஸ்தான் சுதந்திர முன்னணி எனத் தொடங்கி, 10க்கும் மேற்பட்ட புதிய ஆயுதக் குழுக்கள் ஆப்கானில் முளைத்துள்ளன. தொடர் போரினால் சோர்வடைந்த ஆப்கான் மக்கள், புதிய மோதலை விரும்பவில்லை.

நாடு முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சமூக வலைத்தளங்களில் மட்டுமே எதிர்ப்புக் குழுக்கள் இயங்கி வருவதாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் ஆங்கில இணையதளம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்ப்புகள் மேலாதிக்கம் பெற்றுவிடக்கூடாது என்பதில் தலிபான் அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.