ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள், கடந்த 2021இல் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபிறகு, புதிய கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு எதிராகக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் கல்வி, ஆடைக் கட்டுப்பாடுகளும் அடக்கம். தவிர, பெண்கள் விளையாட்டுகளில் கலந்துகொள்ளவும் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சில வீராங்கனைகள் வேறு நாட்டுக்குச் சென்று அங்கிருந்து விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் சதுரங்க விளையாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 11 முதல் அமலுக்கு வந்ததாகவும், சதுரங்கம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் காலவரையின்றி தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், சதுரங்க விளையாட்டு தொடர்பாக மதரீதியான பரிசீலனைகள் உள்ளன எனவும் தாலிபன் அரசாங்கத்தின் விளையாட்டு இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “இஸ்லாமிய ஷரியாவின்கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாகக் கருதப்படுகிறது. இது நாட்டின் நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையைத் தடுப்பதற்கான சட்டத்தின்படி தடைசெய்யப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டிற்கு மதரீதியான ஆட்சேபனைகள் உள்ள நிலையில், அது தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.