இந்தியா-ஆப்கானிஸ்தான் Pt web
உலகம்

மத்திய பட்ஜெட் 2026 |ஆப்கானிஸ்தானுக்கு நிதி ஒதுக்கீடு உயர்வு.. தலிபான் அரசு வரவேற்பு!

2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு அரசு வரவேற்றுள்ளது.

Premkumar S

இந்திய அரசின் பட்ஜெட்டில் ஆண்டுதோறும், குறிப்பிட்டத்தொகையை வெளிநாடுகளுக்கு நிதியுதவியாக வழங்குவது வழக்கம். அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், ஆப்கானிஸ்தானுக்கான இந்தியாவின் நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு அரசு வரவேற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் ஆப்கானிஸ்தானுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு அது ரூ.150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்தத் தொடர்ச்சியான நிதியுதவி, இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை மேம்படுத்தும் என்றும், ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுவதாகவும் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமீர் கான் முத்தாகி, ஜெய்சங்கர்

ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமையைச் சமாளிக்க இந்தியா தொடர்ந்து உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் கல்வி சார்ந்த உதவிகளை வழங்கி வருகிறது. காபூலில் உள்ள இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை போன்ற இந்தியாவின் நிதியுதவியுடன் செயல்படும் திட்டங்களைத் தொடரவும், புதிய வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையின் கீழ், தலிபான் அரசை இந்தியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்காவிட்டாலும், ஆப்கான் மக்களுடனான உறவைத் தக்கவைக்க இந்த நிதி ஒதுக்கீடு உதவுகிறது.

முன்னதாக, நேற்று தாக்கல் செய்யப்பட்ட நாட்டின் பட்ஜெட்டில் 5,685.56 கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கான நிதியுதவியாக ஒதுக்கியிருக்கிறது. அதன்படி இந்தத் தொகையில், அதிகபட்சமாக பூட்டானுக்கு 2,289 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. பூட்டானுக்கு கடந்த ஆண்டு, 2150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வருடம் கூடுதலாக 139 கோடி ரூபாய் ஒதுக்கபட்டிருக்கிறது. அதேபோல, நேபாளத்திற்கும் கடந்த ஆண்டு 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வருடம் 100 கோடி அதிகரித்து 800 கோடியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இலங்கைக்கு 400 கோடி, மாலத்தீவுக்கு 550 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய பட்ஜெட்

அதேசமயம், வங்கதேசத்துக்கு கடந்த ஆண்டு 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வருடம் 60 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், வங்கதேசத்தில் நிலவும் வன்முறையே எனக் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் 5,785 ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்த வருடம் 100 கோடி ரூபாய் குறைவாகவே ஒதுக்கப்பட்டிருக்கிறது