உலகம்

ஆப்கன் விவகாரம்: அமெரிக்க உளவு அமைப்பின் இயக்குநருடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஆலோசனை

Veeramani

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையில் அமைந்துள்ள அரசு குறித்து அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்சை சந்தித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பிற நாடுகள் ஆப்கானிஸ்தான் அரசு குறித்து என்ன நிலைப்பாட்டை எடுக்கின்றன என்பதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்நிலையில், தேசிய பாதுகாப்புச்செயலர் அஜித் தோவல், இந்த விவகாரத்தில் பிறநாடுகளுடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இச்சூழலில் டெல்லியில், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநர் வில்லியம் பர்ன்சை சந்தித்து அஜித் தோவல் ஆலோசனை நடத்தியுள்ளார்.

புதுடெல்லியில் தோவலை சந்தித்த பிறகு ஆப்கானிஸ்தான் தொடர்பாக பிற நாடுகளுடன் பர்ன்ஸ் ஆலோசித்து வருகிறார். டெல்லியில், ரஷ்ய தேசிய பாதுகாப்பு செயலர் நிக்கொலாய் பத்ருஷேவ்வையும், தோவல் சந்தித்துப் பேசினார். ஏற்கனவே பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபர் புடினுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைந்துள்ள அரசு குறித்து இந்தியா இன்னும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காத நிலையில், அடுத்தடுத்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன.