இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்னையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அதிபருக்கான பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை குழுவில் தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், காமன்வெலத் செயலகத்தின் பொருளாதார விவகார பிரிவின் முன்னாள் இயக்குநருமன இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்ஜடவுன் பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு பயிற்சி துறை பேராசிரியரும், உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணருமான சாந்தா தேவராஜன் மற்றும் திறன் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரும், சர்வதேச நிதியத்தின் ஆப்ரிக்க துறை முன்னாள் இணை இயக்குநருமான ஷார்மினி குரே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கான முக்கியமான வழிகாட்டுதல்களை அதிபருக்கு வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் பொதுமக்களும், எதிர்கட்சியினரும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் சுற்றுலாத் துறை முடக்கம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால் மாவு போன்ற உணவுப் பொருட்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு கிடைக்காத நிலை உள்ளது. இதோடு 13 மணி நேர மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.