அம்பானி, அதானி
அம்பானி, அதானி ட்விட்டர்
உலகம்

அப்படியா செய்தி!! முதல்முறையாக இணையும் 'அதானி - அம்பானி'.. பவர் நிறுவனத்தில் ரிலையன்ஸ் முதலீடு!

Prakash J

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களான முகேஷ் அம்பானியும், கெளதம் அதானியும் தங்களுடைய வர்த்தகத்தில் இருபெரும் துருவங்களாகவும், போட்டியாளர்களாகவும் இருக்கும் நிலையில், தற்போது முதல்முறையாக இருதரப்பும் இணைந்து செயல்பட உள்ளனர். அதாவது அதானி பவர் நிறுவனத்துடன் அம்பானி நிறுவனம் இணைந்து செயல்பட உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் அதானி பவர் நிறுவனத்தின் துணை நிறுவனமான மஹான் எனர்ஜென் நிறுவனம் மின்சாரத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனத்தில்தான் 26 சதவீத பங்குகளை அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியுள்ளது. மொத்தம் 5 கோடி பங்குகளை ரூ.50 கோடிக்கு ரிலையன்ஸ் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், மத்திய பிரதேசத்தில் செயல்பட்டு வரும் அதானியின் மின்சாரத் திட்டத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை ரிலையன்ஸ் பயன்படுத்த இருப்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிக்க: பாஜகவில் இணைந்த கருணாஸ் படநடிகை: அமராவதியில் மீண்டும் போட்டி..வலுக்கும்எதிர்ப்பு! நவ்நீத் ராணா யார்?

கடந்த 2022-ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் உடன் தொடர்பிலிருந்த ஒரு நிறுவனம், என்டிடிவியின் பங்குகளை அதானிக்கு விற்று, அதைக் கையகப்படுத்துவதற்கு வழிவகுத்தது பேசுபொருளானது. அதே ஆண்டு 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பங்கேற்க அதானி குழுமமும் விண்ணப்பித்த நிலையில், மோதல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ரிலையன்ஸ் நிறுவனத்தைப் போன்று, பொது நெட்வொர்க்குகளுக்கு அதானி குழுமம் விண்ணப்பிக்காததால் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. ஏனென்றால், தொலைத்தொடர்பு வணிகத்தில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் கோலோச்சி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக அதானி களமிறங்குகிறாரோ என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏலத்தில் சிறிய அளவில் தனது கம்பெனிக்காக அலைக்கற்றையை வாங்கினார் அதானி. இதனால் எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட வரவேற்பில் கெளதம் அதானியும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இவர்கள் இருவரும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அதானியும் அம்பானியும் இருவரும் இணைந்து செயல்பட உள்ளது வர்த்தகச் சந்தையில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

இதையும் படிக்க: கனடா கல்விக்கு 'NO' சொல்லும் இந்தியர்கள்.. 5 ஆண்டுகளில் 8% குறைந்த மாணவர் எண்ணிக்கை.. பின்னணி என்ன?