உலகம்

ஊழல் வழக்கு - நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை

rajakannan

ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவரது அரசியல் வாழ்க்கையை புரட்டி போட்டு வருகின்றன. நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 3 ஊழல் வழக்குகள் போடப்பட்டன. இதில் சொத்து குவிப்பு வழக்கில் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பு வந்தது. அந்த வழக்கில், நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில், மீதமுள்ள இரண்டு வழக்குகள் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில், அல்-அஜிஸா இரும்பு ஆலைகள் ஊழல் வழக்குல் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷெரீப்புக்கு 17 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்து தேசிய பொறுப்பான்மை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

மற்றொரு ஊழல் வழக்கில் ஷெரீப்புக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் தெரிவித்தது. அதனால், ஒரு ஊழல் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு பாகிஸ்தானில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கு வித்திடும் என்று கூறப்படுகின்றது. 

இந்தத் தீர்ப்பை அடுத்து, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சி ஆதரவாளர்கள், நீதிமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாப்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை களைக்கும் பொருட்டு போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், லேசான பதட்டம் ஏற்றப்பட்டது. நிறைய ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு நீண்ட தூரத்திற்கு முன்பாகவே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.