உலகம்

ஆர்டர் செய்ததோ ஐபோன் 13 புரோ மேக்ஸ்.. ஆனால் வந்ததோ வேறு: ஆன்லைன் பர்சேஸ் பரிதாபங்கள்

ஆர்டர் செய்ததோ ஐபோன் 13 புரோ மேக்ஸ்.. ஆனால் வந்ததோ வேறு: ஆன்லைன் பர்சேஸ் பரிதாபங்கள்

EllusamyKarthik

இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்கள் இ-காமர்ஸ் தளங்கள் மூலமாக பொருட்களை வாங்குவது வழக்கம். சமயங்களில் விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்த பயனர்களுக்கு மலிவு விலையிலான பொருட்கள் மாறி வரும் சம்பவங்களும் நடப்பதுண்டு. அப்படியொரு சம்பவம் பிரிட்டன் நாட்டில் அண்மையில் நடைபெற்றுள்ளது. 

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் அந்த நாட்டு கரன்சியில் 1500 பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்புள்ள ஐபோன் 13 புரோ மேக்ஸ் போனை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வந்ததோ வேறொரு பொருள். 

அந்த நாட்டில் உள்ள வடக்கு லண்டன் பகுதியை சேர்ந்தவர் Khaoula Lafhaily. 32 வயதான அவர் கடந்த ஜனவரி 24-ஆம் தேதியன்று ஸ்கை மொபைலில் ஐபோன் வாங்கியுள்ளார். அதற்கான முன் பணத்தையும் (150 பவுண்ட் ஸ்டெர்லிங்) செலுத்தியுள்ளார் அவர். மீதமிருக்கும் தொகையை 36 மாத தவணையில் செலுத்துவதாக ஒப்பந்தம். மறுநாளே அவரது கைக்கு போன் டெலிவரியாகும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 27-ஆம் தேதியன்று அவருக்கு பார்சல் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. அதை திறந்து பார்த்த போதுதான் அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

“அன்று காலை எனது கணவர்தான் பொருளை வாங்கினார். நான் தூக்கத்தில் இருந்தேன். மதியம்தான் அந்த பார்சலை பிரித்தோம். ஆனால் அதில் ஐபோனுக்கு பதிலாக ஹேண்ட் சோப்பு இருந்தது. எனக்கு வரவேண்டிய பொருள் களவு போயுள்ளது. எனக்கு அந்த போன் வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.