உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா பெருந்தொற்று நோய். ‘இதற்கு ஒரு தீர்வே இல்லையா?’ என உலக மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். மாஸ்க் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது இந்த நோயை எதிர்கொள்வதற்கான வழிகளாக உள்ளன. இத்தகைய சூழலில் விமானத்தில் மாஸ்க் அணியாமல் சாப்பிட்டதற்காக 80 வயது முதியவரை, பெண் ஒருவர் தாக்கியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் தாக்குதலை மேற்கொண்ட அந்த பெண் மாஸ்க் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் நடைபெற்றுள்ளது. டெல்டா ஏர் லைன் விமானத்தில் பயணித்த அந்த பெண், தனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த முதியவரை தாக்கியுள்ளார். பயணத்தின் போது மாஸ்க் அணிந்திருந்த அந்த முதியவர், சாப்பிடுவதற்காக மாஸ்க்கை கழட்டி உள்ளார். அப்போதுதான் அவரை தாக்கியுள்ளார் அந்த பெண்.
அதனை சக பயணிகள் வீடியோவாக தங்களது போன்களில் பதிவு செய்துள்ளனர். விமானம் தரையிறங்கியதும் அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
பயணிகளின் இது மாதிரியான செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என டெல்டா ஏர் லைன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோ இணைய வெளியில் வைரலாகி உள்ளது.