உலகம்

“நானா அந்த கொரோனாவானு ஒரு கை பாத்துற்றேன்” - சீன தம்பதியின் Pro Level ஐடியா!

JananiGovindhan

சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் தலைத்தூக்கியிருப்பதால் உலக நாடுகள் எல்லாம் மிகப்பெரிய அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறது. கொரோனாவின் இரண்டு, மூன்று அலைகளால் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளான மக்கள் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் எங்கு தொடங்கியதோ அங்கிருந்தே மீண்டும் ஒரு புதுவகையான கொரோனா திரிபு பரவத் தொடங்கியிருக்கிறது. சீனாவில் மட்டுமே கிட்டத்தட்ட 25 கோடிக்கும் மேலானோர் புது வகை ஒமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் உலக நாடுகள் அனைத்தும் கண்ணும் கருத்துமாக கண்காணித்து வருகிறது.

ஆனால் சீனாவிலோ கொரோனாவை சாதாரண காய்ச்சல் போன்று கருதி எந்த கட்டுப்பாடும், ஊரடங்கும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சீன மக்கள் பலரும் சாவகாசமாக பொதுவெளியில் மாஸ்க் மட்டும் அணிந்தபடி சுற்றித் திரிவதை சர்வதேச செய்தித்தளங்களின் மூலம் அறிய முடிகிறது.

இப்படி இருக்கையில், People's daily china என்ற ட்விட்டர் பக்கத்தில், தம்பதி ஒருவர் கொரோனா தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக மேற்கொண்ட Pro level ஐடியாவை வீடியோவாக பதிவிட்டிருக்கிறார்கள். அதன்படி, அந்த தம்பதி இருவரும் பிளாஸ்டிக் கவரை பெரிய குடையாக மாற்றி அதற்குள் மாஸ்க் அணிந்தபடி சந்தைக்குள் உலா வருகிறார்கள்.

இந்த வீடியோ கிட்டத்தட்ட 90 ஆயிரத்துக்கும் மேலானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தம்பதியின் இந்த விசித்திரமான அணுகுமுறையை பாராட்டி வருகிறார்கள்.