Raining Street in dubai reuters
உலகம்

துபாயில் ஒரு சுவிட்சர்லாந்து.. 24 மணி நேரமும் பொழியும் மழை.. அறிவியலின் அடுத்த அதிசயம்!

துபாயில் 24 மணி நேரமும் பொழியும் வகையில் 'ரெய்னிங் ஸ்ட்ரீட்' (Raining Street) என்ற ஒரு தெரு உருவாக்கப்பட்டுள்ளது.

Praveen Joshva L

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக துபாய் அமைந்துள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதி காரணமாக உலகத்தின் பணக்கார பகுதிகளில் ஒன்றாக துபாய் உருமாறியுள்ளது. எனினும் அந்தப் பகுதியின் கச்சா எண்ணெய் விரைவில் தீர்ந்துவிடும் என்று கூறப்படுவதால், தங்களின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில்கொண்டு துபாய் அரசு சுற்றுலாத்துறையை அதிகளவில் ஊக்குவித்து வருகிறது. இதற்காக கடலில் செயற்கைத் தீவுகள், கேளிக்கை விடுதிகள், பிரம்மாண்ட கட்டடங்கள் ஆகியவற்றை துபாய் அரசு உருவாக்கி வருகிறது. அதோடு எளிய சுற்றுலா விசாக்கள் மூலம் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளையும் துபாய் ஈர்த்து வருகிறது

ஆனால், பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள துபாயின் இயல்பான வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸ் முதல் 50 டிகிரி செல்ஸியஸ் வரை செல்வதால் அது சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. அதிலும் குளிரான சீதோஷ்ணம் நிலவும் ஐரோப்பாவின் சுற்றுலாப் பயணிகளே துபாய்க்கு அதிகளவில் வருகை தரும் நிலையில், அவர்களால் துபாயின் கடும் வெப்பத்தைச் சமாளிக்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில், இதற்குத் தீர்வு காணும் வகையில் துபாயில் 24 மணி நேரமும் பொழியும் வகையில், 'ரெய்னிங் ஸ்ட்ரீட்' (Raining Street) என்ற ஒரு தெரு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தெருவில் உயரமான கட்டங்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் கூரைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள குழாய்கள் மற்றும் அமைப்புகள் மூலம் நீர் இந்தத் தெருவில் மழை பெய்வதுபோல தெளிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சில நிமிடங்கள் மழை பொழியும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தெருவின் வெப்பநிலை 27 டிகிரிக்கு மேல் அதிகரிக்கப்படாமல் கண்காணிக்கப்படுவதால், துபாயில் சுவிட்சர்லாந்து போன்ற ஒரு குளிரான சீதோஷ்ண நிலை இங்கு பராமரிக்கப்படுகிறது. இந்த தெருவின் இருபுறமும் ஐரோப்பிய பாணியிலான உணவகங்கள் மற்றும் காபி கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நனையாமல் இருக்க அல்லது மழையை ரசித்துக்கொண்டே நடக்க இலவசமாகக் குடைகளும் வழங்கப்படுகின்றன. இந்த 'ரெய்னிங் ஸ்ட்ரீட்' துபாய் கடற்பகுதியில் உள்ள செயற்கைத் தீவுகளில் ஒன்றான 'ஹார்ட் ஆஃப் யுரோப்' (The Heart of Europe) பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரெஞ்சு பாணியிலான ஹோட்டலில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஹோட்டலில் தங்குபவர்கள் மட்டுமே இந்த தெருவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்பதும், பிற சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.