முகமது அப்சான், வாக்னர்
முகமது அப்சான், வாக்னர் ட்விட்டர்
உலகம்

அதிக சம்பளம் எனும் வலை! உக்ரைன் போரில் ஈடுபட்டு உயிரை இழந்த 2வது இந்தியர்.. பின்னணியில் வாக்னர் படை?

Prakash J

போருக்கு மத்தியில் இறக்கும் இந்தியர்கள்

அதிகம் சம்பளம் கிடைக்கிறது என்பதற்காக தமது உயிரையும் பொருட்படுத்தாது அயல்நாடுகளுக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதிலும், சமீபத்தில் இஸ்ரேல் - காஸா ஆகியவற்றுக்கு இடையே உச்சகட்டத்தில் இருக்கும் போருக்கு நடுவேயும் அதிக சம்பளத்துக்காக இந்திய இளைஞர்கள் செல்வது பற்றிய தகவல் ஊடகங்களில் வெளியாகின. அதில் சமீபத்தில் கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலுக்குப் பலியானார். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகளுக்கான போரில் இந்தியர் ஒருவர் தற்போது கொல்லப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா

ரஷ்ய - உக்ரைன் போரில் இறந்த முதல் இந்தியர்

அதாவது, உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியர்கள் சிலர் வாக்னர் ராணுவக் குழுவில் இணைந்து பணியாற்றுவதாகவும், அவர்களுக்கு அதிகமான சம்பளம் வழங்கப்படுவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. அந்தச் செய்தி வெளியான சமயத்தில், குஜராத்தைச் சேர்ந்த ஹெமில் மங்குகியா என்ற இளைஞர் போர்க்களத்தில் உயிரிழந்தார் என அவரது குடும்பத்துக்கு தகவல் கிடைத்தது. அவர், ரஷ்யாவில் பணிபுரிந்தார் எனவும், ஆனால், அவர் என்ன பணிபுரிகிறார் என்பதும் குடும்பத்திற்குத் தெரியவில்லை எனக் கூறப்பட்டது. ஹெமில் மங்குகியா உடலை மீட்டுத் தர வேண்டும் என அவரது குடும்பத்தினர் இந்திய வெளியுறவுத் துறையிடம் கோரிக்கை வைத்தபோதுதான், இந்த விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. எனினும், இதுபற்றி ரஷ்ய ராணுவமோ அல்லது ரஷ்ய அரசோ தங்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என அவர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந்தியர்கள் ஏமாற்றப்படுவது எப்படி?

ரஷ்யாவில் ராணுவ உதவியாளர்களாக பணிக்குச் சென்ற இந்தியர்கள் இதுதொடர்பாக எந்த தகவலையும் இந்திய அரசுக்கு தெரிவிக்கவில்லை என்பதால் வெளியுறவுத் துறையிடம் இதுதொடர்பான முழு விவரங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் இடைத்தரகர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும்போது, ’முறைகேடுகள் நடைபெறுவதால் இடைத்தகர்கள் யாருக்கும் தகவல்களை தெரிவிக்க வேண்டாம்’ என ஒட்டுமொத்த நடவடிக்கையும் ரகசியமாக வைத்திருக்க கட்டாயப்படுத்துகிறார்கள். அதிக அளவு பணம் விரைவாக ஈட்ட வேண்டும் என்ற ஆசையில், வெளிநாடுகளுக்குப் பணிக்குச் செல்பவர்கள் பலரும் இடைத்தரகர்களுக்கு பல லட்சங்கள் வரை ரொக்கம் அளிப்பதுடன், முறைகேடுகள் குறித்து புகார் அளிப்பதையும் தவிர்க்கிறார்கள். பிரச்னை ஏற்படும் சமயத்தில் இடைத்தரகர்கள் தலைமறைவாகிவிடுவதால், அப்போது மட்டுமே விவரங்கள் வெளிவருகின்றன.

ரஷ்யாவில் 2வது இந்தியர் பலி

இந்த நிலையில்தான், முகமது அப்சான் என்ற ஹைதராபாத் நகரைச் சேர்ந்த இளைஞரும் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளார். அவருடைய மறைவை இந்திய தூதரகம் இன்று உறுதி செய்துள்ளது. அவருடைய குடும்பத்தினர் மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். அவரும் ஏமாற்றப்பட்டு உயிரிழந்திருப்பதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டுவரும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. எனினும், அவருடைய மரணத்திற்கான காரணம் அல்லது ரஷ்யாவில் என்ன வேலையில் ஈடுபட்டார் போன்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

வாக்னர் ராணுவம் என்பது என்ன?

வாக்னர் ராணுவம் என்பது, ரஷ்ய அரசின் உதவியுடன் செயல்பட்டுவரும் தனியார் ராணுவமாகும். உக்ரைன் நாட்டுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவத்துக்கு ஆதரவாக வாக்னர் ராணுவமும் போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், வாக்னர் தனியார் ராணுவத்தில் பல இந்தியர்கள் இணைந்துள்ளனர் என்றும், அவர்கள் உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளார்கள் என்றும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் மாஸ்கோ நகரில் உள்ள ரஷ்ய அதிகாரிகளை தொடர்புகொண்டு போர்முனையில் உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

‘துபாய் மற்றும் மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஆட்சேர்ப்பு பணிகளில் பல இந்தியர்கள் ரஷ்ய படைகளுக்கு பணிபுரிய நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இதில் பலர் உக்ரைன் போர்முனையில் உள்ளனர்’ என வந்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்திய தூதரகம் மூலம் ரஷ்ய அரசை இந்திய அதிகாரிகள் தொடர்புகொண்டனர். போர்முனைகளில் உள்ளவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் விரைவாக அவர்களை அங்கிருந்து விடுவித்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்திய தூதரக அதிகாரிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.

கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தியொன்றில், ’ரஷ்யாவில் சிக்கிக்கொண்ட 20 இந்தியர்கள், இந்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டனர். அவர்களைச் சொந்த நாட்டுக்குக் கொண்டு வரவேண்டிய பணிகளைச் சிறந்த முறையில் செய்துவருகிறோம்’ என தெரிவித்திருந்தது.

வாக்னர் படை

காவல் பணியில் அதிக சம்பளம் என வாக்குறுதி கொடுத்து துபாயை அடிப்படையாகக் கொண்ட ஒருவரின் உதவியுடன் பலர் ரஷ்யாவுக்குச் சென்றுள்ளனர். இதற்காக அந்த துபாய் நபர் தலா ரூ.3 லட்சம் பெற்றதாகவும், இதன்பின்பு சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கிவிட்டு அவர்களை, அவர் போரில் தள்ளியதாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கு ஆயுதங்களைக் கையாளும் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும், பின்பு, உக்ரைனின் கார்கிவ், டொனெட்ஸ்க் மற்றும் மரியுபோல் போன்ற நகரங்களைச் சுற்றி பணியமர்த்தப்பட்டனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள்தான் ரஷ்ய ராணுவத்திற்காக வேலை செய்கின்றனரா அல்லது வாக்னர் என்ற தனியார் ராணுவ அமைப்புக்காக பணியாற்றுகிறார்களா என்பதும் தெரியவில்லை. இதில் 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருக்கலாம் எனவும், இவர்கள் அனைவரும், தெலங்கானா, குஜராத், கர்நாடகா, ஜம்மு - காஷ்மீர், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஏமாற்றப்பட்டு அழைத்துச் சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

முன்னதாக, நேபாளத்தில் இருந்து 200 பேர் வரை ரஷ்ய ராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. உக்ரைனுடனான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 6 நேபாள மக்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் டிசம்பரில் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.