மருத்துவத் துறையில் இன்று பெரும் பங்கைக் கொண்டிருக்கும் எக்ஸ்-ரே (X-ray)கருவி, ஒருகாலத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் வைரத்தை விழுங்கி கடத்துகிறார்களா எனச் சோதிப்பதற்காக, முதன்முறையாக ஒரு பாலைவனப் பகுதியில்தான் பயன்படுத்தப்பட்டது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். இதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம் குறித்து இங்கு அறிவோம்..
தென் ஆப்பிரிக்க நாட்டின் அண்டை நாடான நமீபியாவின் நபீப் (Namib) பாலைவனத்தில் அமைந்துள்ளது, கோல்மன்கோப் (Kolmanskop) நகரம். ஒருகாலத்தில் இந்நகரம், உலகமே வியக்கும் வைர நகரமாக மாறி வரலாற்றில் இடம்பிடித்திருந்தது. 'ஜானி கோல்மன்' (Johnny Coleman) என்பவர், தனது மாட்டு வண்டி, இந்தப் பாலைவன மணற்புயலில் சிக்கியதைத் தொடர்ந்து வண்டியை அங்கேயே விட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து 'கோல்மன்கோப்' என்கிற பெயர் உருவானதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், 1908-ஆம் ஆண்டில், ஜக்காரியாஸ் லேவாலா (Zacharias Lewala) என்ற உள்ளூர்த் தொழிலாளி, அப்பகுதியில் ரயில் பாதையைச் சீரமைக்கும்போது ஒரு பளபளக்கும் கல்லை எடுத்துள்ளார். அது வைரம் என்பதை அவரது மேலதிகாரியான ஆக்ஸ்ட் ஸ்டாச் (August Stauch) என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, ஜெர்மன் அரசாங்கம் அப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து 'தடைசெய்யப்பட்ட பகுதி' என அறிவித்தது. ஆரம்பக் காலத்தில் வைரங்கள் மணல் பரப்பிலேயே சிதறிக்கிடந்ததால், தொழிலாளர்கள் கைகளால் மிக எளிதாக வைரங்களை அள்ளி எடுத்தனர். அதேநேரத்தில், வைர வேட்டையால் இந்நகரம், மின்சார நிலையம், மருத்துவமனை, பள்ளி, திரையரங்கம், இறைச்சிக் கடை, அஞ்சல் நிலையம் மற்றும் பனி தயாரிக்கும் தொழிற்சாலை என ஜெர்மன் கட்டடக்கலை பாணியில் மிகவும் நவீனமாக உருவெடுத்தது. ஓபரா (Opera) இசை நிகழ்ச்சிகள் நடத்த ஐரோப்பாவில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மறுபக்கம், சுரங்கத் தொழிலாளர்கள் வைரத்தை விழுங்கி கடத்துகிறார்களா எனச் சோதிப்பதற்காக, ஆப்பிரிக்காவின் தென் அரைக்கோளத்திலேயே முதன்முறையாக எக்ஸ்-ரே (X-ray)கருவி, இங்குள்ள மருத்துவமனையில் இறக்குமதி செய்யப்பட்டு, பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் வைரங்களின் இருப்பு இப்பகுதியில் குறையத் தொடங்கியதை அடுத்து, 1928-இல், கோல்மன்கோப்பிற்குத் தெற்கே 'ஆரஞ்ச் முண்ட்' (Oranjemund) என்ற இடத்தில் உலகின் மிகப்பெரிய வைரப் படிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனால் அங்கிருந்த பலரும் கோல்மன்கோப்பை விட்டுக் காலிசெய்து புதிய நகரத்திற்குச் சென்றனர்.1956-ஆம் ஆண்டிற்குள் கோல்மன்கோப் நகரம் முற்றிலும் காலியாகி, ஆள் நடமாட்டமில்லாத பேய் நகரமாக மாறியது. தற்போது, நபீப் பாலைவன நகரம், மணல் புயல்கள் காரணமாக அங்குள்ள வீடுகளும், அறைகளும் மணல் மேடுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆம், அங்கிருக்கும் கட்டடங்கள் எல்லாம் அந்த மாட்டு வண்டியைப்போலவே மணலுக்குள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியுள்ளன. அதேநேரத்தில், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இடமாக மாறியுள்ள இந்நகரம், வருவாயை ஈர்ப்பதுடன், திரைப்படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டாகவும் விளங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.