நார் ஈஸ்டர் புயலால் நியூ ஜெர்ஸி பகுதியில் சாலையில் சுறா மீன் நீந்தியது, உள்ளூர் மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ உண்மையானது என உறுதி செய்யப்பட்டது. மீன்வளத்துறை ஆய்வில், இது ஆபத்து இல்லாத ஸ்மூத் டோவ்பிஷ் வகை சுறா எனவும், சிறிய மீன்களை மட்டுமே உணவாக உட்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளை தாக்கும் சக்திவாய்ந்த குளிர்கால புயல்களை நார் ஈஸ்டர் என்று அழைக்கிறார்கள். இந்த வகையான புயல், நியூயார்க், பாஸ்டன், நியூ ஜெர்ஸி, விர்ஜினியா, மெயின் ஆகிய கடலோர பகுதிகளில், பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலால், பெருமழை பெய்து கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு, மின் தடை, போக்குவரத்து பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இப்படியான சூழ்நிலையில், இந்த புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, கடலில் இருந்து சுறா மீன் ஒன்று சாலைக்குள் அடித்து வரப்பட்டுள்ளது.
அதாவது, நியூ ஜெர்ஸியின் கடற்கரைப் பகுதியில் உள்ள லாங் பீச் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள சர்ப் சிட்டி பகுதியில், நார் ஈஸ்டர் புயலால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இந்த வெள்ளத்தில், சுறா மீன் ஒன்று நீந்திச் செல்வதை, உள்ளூர்வாசி ஒருவர் கண்டு, அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் இது ஏ.ஐ வீடியோவாக இருக்கலாம் என்று நினைத்தாலும், பிறகு இது உண்மையானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வீடியோ மீன்வளத்துறையினரின் கவனத்திற்கு சென்றதையடுத்து, அவர்கள் அது எந்த வகையான சுறா என்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதன்படி, இது ஸ்மூத் டோவ்பிஷ் எனப்படும் ஆபத்து இல்லாத சுறா வகை என்றும், 5 அடி வரை வளரக்கூடியவை இந்த சுறாக்கள், சிறிய மீன்களை மட்டுமே உணவாக உட்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற சுறாக்களை போல் இல்லாமல், இரையை கடித்து அரைப்பதற்கு தட்டையான பற்களையே இவை கொண்டுள்ளன என்றும், கூறப்பட்டுள்ளது. இதேபோல், சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு அன்று, மிக்ஜாம் என்ற புயல் ஏற்பட்டபோது, ஏரிகளில் இருந்து மிகப்பெரிய ராட்சத முதலை ஒன்று ஊருக்குள் வந்தது. இதுதொடர்பான வீடியோ, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இறுதியில், அந்த முதலையை வனத்துறையினர் பிடித்து, பாதுகாப்பான பகுதியில் விட்டனர்.