உலகம்

ஆப்கானில் அரசு அமைப்பதில் தலிபான்களிடையே மோதல்? - பாக். உளவுத்துறை தலைவர் பேச்சுவார்த்தை

ஆப்கானில் அரசு அமைப்பதில் தலிபான்களிடையே மோதல்? - பாக். உளவுத்துறை தலைவர் பேச்சுவார்த்தை

JustinDurai
ஆப்கானிஸ்தானில் அரசு அமைப்பது தொடர்பாக தலிபான் அமைப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அதன் மூத்த தலைவரான முல்லா அப்துல் கானி பரதர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலிபான் அமைப்பினர், அரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வெள்ளியன்று இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அரசு அமைக்கும் விவகாரத்தில் தலிபான்களிடையே மோதல் ஏற்பட்டிருப்பதே இதற்கு காரணம் என தெரிகிறது.
தலிபான்களுக்கும் அதனுடைய தொடர்புடைய ஹக்கானி குழுவினருக்கும் இடையே காபூலில் மோதல் நடைபெற்றதாகவும் அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதலின்போது, தலிபான் அமைப்பின் இணை நிறுவனரான முல்லா அப்துல் கானி பரதர் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. தலிபான்களிடையே ஏற்பட்டுள்ள மோதலுக்கு தீர்வு காணும்வகையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைவர் ஃபயாஸ் ஹமீத் காபூல் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இதனிடையே, பாஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற தலிபான்கள் நடத்திய தாக்குதலில் எதிர்ப்பு படையை சேர்ந்த செய்தித்தொடர்பாளர் ஃபஹிம் தஷ்தி கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்திவந்த ஃபஹிம் தஷ்தி கொல்லப்பட்டிருப்பது தலிபான்கள் இன்னும் திருந்தவில்லை என்பதை உணர்த்துவதாக வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.