உலகம்

மெக்சிக்கோ - அமெரிக்கா எல்லையின் 18 அடி உயர இரும்பு வேலியில் ஏறி சிக்கிக் கொண்ட கர்ப்பிணி

EllusamyKarthik

மெக்சிக்கோ மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள 18 அடி உயர இரும்பு வேலியை கடக்க முயன்றுள்ளார் மெக்சிக்கோவை சேர்ந்த 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர். அந்த இரும்பு வேலியில் அவர் வேகமாக ஏறியுள்ளார். ஆனால் 18 அடி உயரத்தை எட்ட முடிந்த அவரால் கீழே இறங்க முடியவில்லை. அதனால் உச்சியில் செய்வதறியாமல் தவித்துள்ளார். மெக்சிக்கோவின் ஜுரெஸ் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் உள்ள எல் பாசோவுக்கு இடையில் உள்ள பகுதியில் தான் அந்த பெண் சிக்கிக் கொண்டார்.

வேலியின் மேல் அந்த இளம் பெண் செய்வதறியாது தவிப்பதை கவனித்த அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரை தீயணைப்பு படையினரின் உதவியுடன் மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அவரை மீண்டும் மெக்சிக்கோவில் சேர்ந்துள்ளனர். 

கர்ப்பிணிப் பெண்ணை மீட்கும் அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.