உலகம்

நியூசிலாந்து தாக்குதல் வீடியோ பரவியது எப்படி? - ஃபேஸ்புக் விளக்கம்

webteam

நியூசிலாந்து தாக்குதல் வீடியோ பிராக்சி தளங்கள் மூலமாக அதிக அளவில் பரப்பப்பட்டதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரின் உள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் இந்தியர்கள் ஐந்து பேரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேரும் பலியாகினர். துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவன், தாக்குல் சம்பவத்தை ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்தான். அதில்தான் அந்த மசூதிக்கு காரில் வந்ததிலிருந்து துப்பாக்கிச் சூடு வரை லைவ் செய்தான்.

அவன் வெளியிட்ட ஃபேஸ்புக் நேரலையை அந்த நேரத்தில் 200 பேர் மட்டுமே பார்த்தனர். மேலும் வீடியோ பதிவேற்றப்பட்ட 29 நிமிடங்களில், 4 ஆயிரம் முறை மட்டுமே பார்க்கப்பட்டிருந்தது. உடனடியாக ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் அந்த வீடியோ குறித்து ரிப்போர்ட் செய்தவுடன் வீடியோவை உடனடியாக நீக்கியதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. 

ஆனால் பல தளங்களிலும் அந்த வீடியோ வைரலாக பரவியது. ஃபேஸ்புக் நீக்கியும் அந்த வீடியோ எப்படி பரவியது எனப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் ஃபேஸ்புக் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதற்கு விளக்கம் அளித்துள்ள ஃபேஸ்புக், வீடியோ வெளியாகி 29 நிமிடங்களுக்குப் பிறகே எங்களுக்கு ரிப்போர்ட் வந்தது. உடனடியாக நாங்கள் நீக்கினோம். ஆனால் அந்த வீடியோவை முன்பே டவுன்லோட் செய்த தீவிரவாத ஆதரவுக் குழு ஒன்று, பிராக்சி தளங்கள் மூலமாக வீடியோவை மீண்டும் பரப்பியுள்ளது. இப்படித்தான் அந்த வீடியோ பரவியது என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.