உலகம்

நொடிப்பொழுதில் பூகம்பத்தை உணர்ந்த தந்தை.. மகளை தூக்கிக்கொண்டு ஓடிய வைரல் வீடியோ!

JananiGovindhan

இயற்கை பேரழிவின் போது அன்பிற்குரியவர்களை தக்க நேரத்தில் காப்பாற்ற முயல்வது என்பது எல்லா சமயத்திலும் நேர்த்தியாக நடைபெற்றிடாது. ஆனால் துல்லியமாக கவனித்து செயல்பட்டால் முடியும் என்பதை தற்போது வைரலாகியிருக்கும் வீடியோ ஒன்றின் மூலம் அறியலாம்.

அதன்படி, Failarmy என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பூகம்பம் வருவதை உணர்ந்த தந்தை ஒருவர் தனது மகள் மற்றும் மனைவியுடன் வீட்டை வெளியேறிய சம்பவம் குறித்த சிசிடிவி காட்சியை பகிர்ந்து, அப்பாவின் குணங்கள் என்று கேப்ஷனும் இடப்பட்டிருக்கிறது.

அந்த வீடியோவில், “தந்தை ஒருவர் வீட்டில் உள்ள டைனிங் டேபிள் அருகே சேரில் உட்கார்ந்திருக்கிறார். அவரது மகள் டேபிளில் அமர்ந்திருக்கிறார். திடீரென நிலநடுக்கம் வருவதை உணர்ந்த அந்த தந்தை தனது மகளை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றுவிடுகிறார்.

பின்னர் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் அங்கும் இங்குமாக தானாக அசைவதை காணமுடிகிறது. பிறகு அவரது மனைவியும் வீட்டுக்கு வெளியே வந்துவிடுகிறார்.”

இந்த வீடியோவை 4 கோடிக்கும் அதிகமானோர் பார்த்து, அந்த தந்தையின் துரிதமான செயலை கண்டு வியந்து பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், அந்த வீடியோ பதிவில், ஜெனிஃபர் என்ற பெண் ஒருவர் வீடியோவில் இருக்கும் சம்பவம் கடந்த 2018ம் ஆண்டு அலஸ்காவில் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நில நடுக்கம் என்றும் வீடியோவில் இருப்பது தன்னுடைய கணவர் மற்றும் மகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைக் கண்ட இணையவாசிகள், உங்களுக்கு ஹீரோவே கணவராக வாய்த்திருக்கிறார் என்றும், சிறந்த தந்தை என்றும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

ALSO READ: