Arab alliance surges in israel Reuters
உலகம்

இஸ்ரேல் தேர்தலில் அதிரடி ட்விஸ்ட் : எழுச்சி பெற்ற அரபு கூட்டணி.. அதிரடி முடிவை எடுத்த இடதுசாரிகள்!

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், இடதுசாரி கட்சிகள் எடுத்துள்ள முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

Praveen Joshva L

இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்-க்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுத் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று பிற வலதுசாரி மற்றும் மதவாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றியது.

தொடர்ந்து நடப்பு கெனெசெட்டின் பதவி காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அங்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் 77.7% வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது. அதிலும் வாக்குரிமை பெற்ற 80% பாலஸ்தீனர்கள் இந்த தேர்தலில் வாக்களித்தனர்.

தேர்தலுக்கு பின் வெளியான கருத்து கணிப்புகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி 52 இடங்கள் வரையிலும், முன்னாள் ராணுவ தளபதி காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 50 இடங்கள் வரையிலும் வெல்லும் என்றும், அரபு கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 18 இடங்கள் வரை வெல்லும் என்றும் கருத்து கணிப்புகள் வெளியாகின.

120 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 61 இடங்களை வெல்லும் கட்சியே ஆட்சியமைக்கும் என்ற சூழலில், எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன.

இந்த சூழலில் பதிவான வாக்குகள் நேற்றிலிருந்து எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்போது வரை 82 % வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. இதில், பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வலதுசாரி கூட்டணி 53 இடங்களிலும், காடி ஐசென்காட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 48 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அரபு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு கட்சிகள் 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.

அரபு கட்சிகள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், நெதன்யாகுவின் லிகுட் கட்சி எவ்வித நேரடி ஆதாரமும் இன்றி, அரபுக் கட்சிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுத் தேர்தலைத் திருடிவிட்டன எனக் குற்றம் சாட்டியுள்ளது.

யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் இஸ்ரேலின் இரண்டு கூட்டணி கட்சிகளும், அரபு சமூகக் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளதால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்று தற்போது 7 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள இஸ்ரேலின் இடதுசாரிக் கட்சிகளான உழைப்பாளர் கட்சி (Labor Party) மற்றும் மெரெட்ஸ் (Meretz) ஆகியவை பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை பிடிப்பதை தடுக்கவேண்டும் என்றால் அரபு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இன்னும் சுமார் 4.3 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணப்படவேண்டிய நிலையில், விரைவில் முழு வெற்றி நிலவரமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.