உலகம்

நூற்றாண்டில் இல்லாத பேரழிவு.. 40ஆயிரத்தை தொடும் பலி - ரயில் பெட்டிகளில் தங்கும் மக்கள்!

Rishan Vengai

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையானது 39 ஆயிரத்தை கடந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கியியில் கட்டட இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. உயிருடன் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கஹ்ராமன்மாராஸை மையமாகக் கொண்டு பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட கொடூரமான ராட்சச நிலநடுக்கத்தின் பின்விளைவாக துருக்கியில் மட்டும் சுமார் 1,05,505 பேர் காயமடைந்துள்ளதாகவும், அண்டை நாடான சிரியாவில் கிட்டத்தட்ட 3,700 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளிலும் மொத்த பலி எண்ணிக்கையானது 39,000-க்கும் மேல் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியின் நிலை குறித்து, பேரிடர் நிறுவனமான AFAD-ன் தலைமையகத்தில் நடைபெற்ற 5 மணி நேர அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு, அந்நாட்டின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் பேசுகையில், துருக்கி நாடு நிறுவப்பட்டதிலிருந்து கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத வகையில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 2,11,000 குடியிருப்புகளைக் கொண்ட 47,000 கட்டடங்கள் நாசமாகியுள்ளன. 13,000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். "அழிந்த கட்டடங்களில் இருந்து எங்கள் கடைசி குடிமகனை வெளியேற்றும் வரை நாங்கள் எங்கள் பணியை நிறுத்த மாட்டோம்” என்று தெரிவித்த அவர், இதை "நூற்றாண்டின் பேரழிவு" என்று குறிப்பிட்டார்.

சிரியாவை பொறுத்தவரை நிலைமை மேலும் மோசமான அவநம்பிக்கையானதாக மாறியுள்ளது. அந்நாட்டின் 12 ஆண்டுகால உள்நாட்டுப் போரானது அனைத்து நிவாரண முயற்சிகளையும் சிக்கலாக்கியுள்ளது. நாட்டிற்குள் இருக்கும் மக்களுக்கு எப்படி மருத்துவ உதவிகளையும், மருத்துவ உபகரணங்களையும் கொண்டு சேர்ப்பது என்ற கடினமான சூழ்நிலை தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கிறது. அங்கிருக்கும் மக்கள் தங்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

இதற்கிடையில் துருக்கியில் வீடுகளை இழந்த மக்கள், தங்கும் இடம் இல்லாததால் ரயில் பெட்டிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தொடர்ந்து உதவி நிறுவனங்களும், அரசாங்கங்களும், துருக்கி மற்றும் சிரியாவின் பேரழிவிற்குள்ளான பகுதிகளுக்கு, உதவிகளை வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.