ஸ்வீடன் நாட்டில் உள்ள STOCKHOLM INTERNATIONAL PEACE RESEARCH INSTITUTE என்ற உலக அமைதி தொடர்பான ஆராய்ச்சி மையம் அணுகுண்டுகள் தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியா ஒரே நேரத்தில் பல அணுகுண்டுகளை எடுத்துச் செல்லக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் சீனா 100 புது அணுகுண்டுகளை உருவாக்கியுள்ளதாகவும் அதனிடம் உள்ள அணுகுண்டுகள் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளதாகவும் சிப்ரி என்ற அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, பிரான்ஸ், பிரிட்டன், இஸ்ரேல் ஆகிய மற்ற நாடுகளும் தங்கள் அணுஆயுத திட்டங்களை நவீனப்படுத்தி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 அணுஆயுத நாடுகளிடம் 12 ஆயிரத்து 241 அணுகுண்டுகள் இருப்பதாகவும் இதில் 3 ஆயிரத்து 912 குண்டுகள் ஏவுகணைகளிலும் விமானங்களிலும் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. இதில் மிகப்பெரும்பாலானவை அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் இருப்பதாக சிப்ரி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகளும் அணுஆயுத வலிமையை அதிகரிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆபத்தான அணுஆயுத போட்டி உலக நாடுகளிடையே அதிகரித்து வருவதும் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் பலவீனமடைந்திருப்பதும் கவலை தருவதாக சிப்ரி அறிக்கை கூறுகிறது. ரஷ்யா - உக்ரைன், ஈரான் - இஸ்ரேல், இந்தியா - பாகிஸ்தான் என அவ்வப்போது மோதல்கள் நடக்கும் நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.