காதலுக்கு வயதில்லை என்று சொல்வதுண்டு... அது மீண்டுமொரு முறை உண்மையாகி உள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மகாணத்தைச் சேர்ந்த நூறு வயது கடந்த காதலர்கள் திருமணம் செய்துக்கொண்டு தம்பதியினராகி உள்ளனர். இந்த திருமணம் தற்போது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சாதனை புத்தகத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள இந்த காதல் திருமணத்தின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்...
இது ஒரு விநோதமான காதல் கதை.. சில கதைகள் தான் கேட்கும் போதே நம்முடைய மனதிற்கு அப்படியொரு இனிமை இருக்கும். அப்படியான தித்திக்கும் காதல் கதை தான் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. பென்சில்வேனியா நாட்டின் முக்கிய நகரமான பிலடெல்பியாவைச் சேர்ந்த 100 வயதான பெர்னி லிட்மேன் என்பவர், தன்னைவிட இரு வயது பெரியவரான மர்ஜோரிஃபிடர்மேன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். 100 திருமணம் என்பதே ஆச்சர்யமாக இருக்க, காதல் திருமணம் என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இவர்களது திருமணமானது வைரலாகி வருவதுடன் கின்னஸில் இடம்பெற்றுள்ளது தனித்துவமான அம்சம்.
இருவரும் பிலடெல்பியாவில் தங்களின் குடும்பத்தினருடன் வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். பிறகு இருவரும் பிலடெல்பியாவில் உள்ள ஒரு மூத்த குடிமகன்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒன்பது வருடங்களுக்கு அங்கு நடந்த ஒரு விருந்தில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். பார்த்ததும் தங்களின் உறவை வளர்த்து வந்துள்ளனர். அதற்கு ஒரு பின் கதையும் இருக்கிறது. அதனை பின்பு பார்க்கலாம்.
அந்த நிகழ்வில் தொடங்கிய அவர்களின் புதிய உறவு ஒன்பது ஆண்டுகாலமாக தொடர்ந்தது. அந்தப் பழக்கத்தில் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துக்கொண்டனர். இடையில் வந்த கொரோனா பேண்டமிக் காலமானது இருவரது உறவும் ஆழப்பட காரணமாக அமைந்துள்ளது. ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்துள்ளனர் அந்த இக்கட்டான காலத்தில்.
காதல் முற்றினால் அடுத்து திருமணம் தானே. ஆம், தங்கள் வயது குறித்து அவர்கள் எந்த தயக்கத்தையும் எடுக்கவில்லை. முறைப்படி உறவில் தொடர முடிவெடுத்தார்கள். கடந்த மே மாதம் 19ம் தேதி திருமண பந்தத்திற்குள் இணைந்துள்ளனர். தற்பொழுது இவர்களின் திருமணமானது உலகில் மிக வயதான திருமண ஜோடி என்ற வரிசையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி கின்னஸ் ரெக்காடில் இடம் பெற்றுள்ளனர்.
இதில் ஆச்சரியமான செய்தி என்னவென்றால் இருவரும் தங்களின் இளமைப்பருவத்தில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஒரே நேரத்தில் பயின்றுள்ளனர். ஒரே நேரத்தில் படித்த போதும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததே இல்லை. ஆனால் காலம் அவர்களை மீண்டும் சந்திக்க வைத்ததோடு அல்லாமல் இருவரையும் ஒன்றிணைக்கும் என்று அவர்களே எதிர்பாத்திருக்க மாட்டார்கள்.
பெர்னி படித்துமுடித்து ஒரு பொறியாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். அதே போல் மார்ஜோரி படித்து முடித்து ஒரு ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர்களின் திருமணத்தின் போது பெர்னியின் நான்கு தலைமுறையைச்சேர்ந்த குடும்பத்தினர் கலந்துக்கொண்டனர்.
திருமண நாளன்று தம்பதியினர் இருவரும் தங்களது சக்கர நாற்காலியில் உறவினர்களால் விழாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு தங்களது சொந்த பந்தங்களுக்கு இடையே இருவரும் முறைப்படி திருமணம் செய்துக்கொண்டனர். உறவினர்கள் பலருக்கு இவர்களது திருமணம் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. ஏனெனில் பழகுவார்கள் ஆனால் திருமணம் வரை செல்லமாட்டர்கள் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். அதனால்தான் இது அவர்களுக்கு சர்ஃப்ரைஸ் ஆக இருந்துள்ளது.
இருவரும் இந்த புதிய அத்தியாயத்தை ஒன்றாகத் தொடங்கியபோது மகிழ்ச்சியில் ஒளிர்ந்தனர். தற்பொழுது இது வைரலாகி வருகிறது. கின்னஸ் உலக சாதனை நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளது. இந்த பதிவிற்கு கீழ் பலரும் அந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.