20 வயதான எலிசபெத் பெனாசி என்ற பெண், UK-வில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு அவர் அணிந்து செல்லும் காலணிக்காக அலுவலகத்தில் உள்ளவர்கள் எலிசபெத்தை கேலிக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்றவர்கள் இதேபோல காலணி அணிந்துவரும் போது எந்தவித கேலிக்கும் உள்ளாவதில்லை என்றும், தான் மட்டுமே நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும் நிறுவனத்தாரிடம் எலிசபெத் கூறியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு தனது 18வயதில் அந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த எலிசபெத்தை, அவரது மேலாளர் உட்பட பலரும் ஷூவிறக்காக விமர்சித்துள்ளனர். தனக்கு நிறுவனத்தின் ஆடை கட்டுப்பாடுகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என எலிசபெத் கூறியுள்ளார். இருந்த போதிலும், ஒருகட்டத்தில் ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து வந்த காரணத்தை சொல்லி அவரை பணிநீக்கம் செய்துள்ளது அந்நிறுவனம். இது நியாயமற்றது என எலிசபெத் அந்நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள் செவி சாய்க்காததால் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார் எலிசபெத். லண்டனில் உள்ள தீர்ப்பாயம் அந்த வழக்கை விசாரித்தபோது, “குறிப்பிட்ட அந்த நிறுவனம் எலிசபெத்தை வேலையை விட்டு நீக்கம் செய்வதற்காக வேண்டுமென்றே இந்த காரணத்தை கூறியுள்ளனர். இது முழுக்க முழுக்க நியாயமற்றது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக 30,000 பவுண்டு (இந்திய மதிப்பு படி 32 லட்சம் ரூபாய்)வழங்கவேண்டும்” என தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து இந்த தீர்ப்பு உலகம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.