பப்புவா நியூ கினியா நாட்டில் மகளிர் பாதுகாப்புக்காக, மகளிரால் மட்டுமே இயங்கக் கூடிய பேருந்து சேவைக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்திருக்கிறது Papua New Guinea. சின்னஞ்சிறிய தீவு நாடு என்றாலும் 820 மொழிகள் இங்கு பேசப்படுகின்றன. எந்த அளவுக்கு இங்கு மொழிகள் அதிகமோ, அந்த அளவுக்கு பிரச்னைகளும் அதிகம். தலைநகரான PORT MORESBY-ல் நிலைமை படுமோசம். பெண்கள் ஆபத்து இல்லாமல் வெளியே சென்று வர முடியாத நிலை இருந்தது. சங்கிலி பறிப்பு முதல் பணத்துக்காக கத்திக் குத்து வரை குற்றச்செயல்கள் வெகு சாதாரணமாக நடந்தன.இதனால் பெண்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்த நிலையில், ஒரு மகளிர் அமைப்பு மட்டும், மோசமான நிலைமையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையில் துணிச்சலுடன் களமிறங்கியது. இதற்காக உள்ளூரைச் சேர்ந்த சில மகளிர் அமைப்புகளை இணைத்துக் கொண்டு, பெண்களுக்கான பிரத்யேக பேருந்து போக்குவரத்தை தொடங்கியது.
2012 ஆம் ஆண்டு கினிகவுடா என்ற அறக்கட்டளை இரு பேருந்துகளுடன் இலவசமாக இந்த பேருந்து சேவையை தொடங்கியது. இதன்மூலம் பயிற்சி அளிக்கப்பட்ட பெண்களை ஓட்டுநர்களாகவும், நடத்துநர்களாகவும் பணியில் அமர்த்தினர். பின் மகளிர் பாதுகாப்பு பேருந்துகள் என பெயரிடப்பட்ட நகரில் வலம் வரத் தொடங்கின. தற்போது 10 பேருந்துகளாக இந்த சேவை விரிவடைந்திருக்கிறது. பெண்களிடையே இதற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, ஐ.நா.வின் மகளிர் நல அமைப்பும் ஆதரவு அளித்தது.
தினசரி ஆண் ஓட்டுநர்கள் தன்னை ஏளனமாக பேசினாலும், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆத்ம திருப்தியுடன் இந்தப் பணியை செய்து வருவதாகவும் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வது தனது கடமை எனவும் பெருமிதம் பொங்க தெரிவிக்கிறார், இதில் ஓட்டுநராக பணிபுரியும் 47 வயதான கேத்தி தக்கோரி.
பெண்கள் அதிக அளவில் இந்த பேருந்து சேவையை பயன்படுத்தியதை தொடர்ந்து, தற்போது குறைந்த அளவில் பேருந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு, குறைவான கட்டணம் போன்ற அம்சங்களால், பெண்கள் பெரும்பாலும் இந்த பேருந்தில் தான் பயணிக்கின்றனர். இதனால் பிற தனியார் பேருந்து நிறுவனங்கள், இந்த பேருந்து சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடமையே கண்ணாக இந்த பேருந்து சேவையை பெண்கள் இயக்கி வருவது, ஒட்டுமொத்த நாட்டினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.