உலகம்

கானா: வெடி மருந்து நிரப்பப்பட்ட லாரி வெடித்து சிதறியதால் பயங்கரம்: 13 பேர் உயிரிழப்பு

JustinDurai

ஆப்ரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 13 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

கானாவின் ஏப்பியோட் பகுதியில் உள்ள தங்கச் சுரங்கத்திற்கு வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரிக்குள் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த வீடுகள் பலத்த சேதமடைந்ததுடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடல் சிதறி இறந்தனர். ஒரு கிராமமே தரைமட்டமாகியுள்ள நிலையில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. தற்போது வரை 13 பேர் இறந்துள்ள நிலையில் 180 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடி விபத்து ஏற்பட்ட இடத்தில் 66 அடி அகலத்திற்கு மிகப்பெரிய பள்ளமும் உருவாகியுள்ளது விபத்தின் தீவிரத்தன்மையை காட்டுவதாக உள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீடுகளே இடிந்து விழும் அளவுக்கு வெடிவிபத்து சக்தி வாய்ந்ததாக இருந்ததாக நிபணர்கள் தெரிவித்தனர். திடீரென வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால் லாரி நிறுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அப்போது வெடி பொருட்களுக்குள் உராய்வு ஏற்பட்டு விபத்து நடந்திருக்கலாம் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.