9/11 தாக்குதல் Reuters
உலகம்

உலக வல்லரசையே அதிரவைத்த தாக்குதல்.. இரட்டைக் கோபுர தகர்ப்பின் 25-வது ஆண்டு!!

உலகையே அதிரவைத்த இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. பூமிப்பந்தையே பீதியில் தள்ளிய அந்நிகழ்வை திரும்பிப்பார்க்கலாம்.

PT WEB

2001 செப்டம்பர் 11. காலை 8:46 மணி. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வல்லரசின் கம்பீர அடையாளமாக நின்ற உலக வர்த்தக மையத்தின் மீது அதிபயங்கர வேகத்தில் மோதியது. கரும்புகையும் நெருப்புப் பிழம்புகளும் கிளர்ந்தெழுந்தன. தொடக்கத்தில் இதனை ஒரு விபத்து என்றே ஊடகங்களும் மக்களும் கருதினர். ஆனால், சரியாக 17 நிமிடங்கள் கழித்து, காலை 9:03 மணிக்கு, மற்றொரு விமானம் அருகிலிருந்து கோபுரத்தை துளைத்தது. மூன்றாவது விமானம் காலை 9:37 மணிக்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon) கட்டடத்தின் மீது மோதியது. கடத்தப்பட்ட நான்காவது விமானத்தில் பயணிகள் தீவிரவாதிகளை எதிர்த்து போராடியதால், திட்டமிடப்பட்ட வெள்ளை மாளிகை அல்லது நாடாளுமன்ற இலக்கை அடையமுடியாமல் பென்சில்வேனியாவில் திறந்தவெளியில் விழுந்து நொறுங்கியது.

Twin tower Attack

நடந்தது விபத்தல்ல, மிகக் கொடூரமாகத் திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்பது சிறிது நேரத்திற்கு பின்பே உறைத்தது. 19 பயங்கரவாதிகள் நான்கு விமானங்களை ஒரே நேரத்தில் கடத்தி தாக்குதல்களை அரங்கேற்றியிருந்தனர். இரட்டைக் கோபுரங்கள் தீப்பற்றி எரிந்தபோது உருவான வெப்பம், எஃகுத் தூண்களை உருக்கத் தொடங்கியது. வானுயர்ந்து நின்ற கட்டடங்கள் சில மணித்துளிகளில் தரைமட்டமானது. இந்தக் கோரத் தாக்குதலில் 2,977 அப்பாவிகள் உயிரிழந்தனர்.

இத்தாக்குதல் வெறும் கட்டடங்களை மட்டும் தகர்க்கவில்லை; ஒட்டுமொத்த உலக ஒழுங்கையே மாற்றி அமைத்தது. இன்று அந்த இரட்டைக் கோபுரங்கள் நின்ற இடத்தில், உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பிரம்மாண்டமான நினைவிடமும் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளன. மனித வரலாற்றில் மறக்க முடியாத வடுக்களை விட்டுச்சென்ற அந்த நாள், மனிதகுலத்தின் பாதுகாப்பின்மை, துயரம் மற்றும் சக மனிதர்களைக் காக்கத் துணிந்த தியாகத்தின் அடையாளமாக இன்றும் நினைவுகூரப்படுகிறது.