உலகம்

9/11 பாணி?.. விமானம் மூலம் வால்மார்ட் அங்காடியை தகர்ப்பதாக மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

webteam

அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாகாணத்தில் வால்மார்ட் அங்காடியை விமானம் மூலம் தாக்கப்போவதாக விமானி மிரட்டல் விடுத்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் மிஸிஸிப்பி மாகாணத்தி உள்ள டூபலே நகரில் உள்ள வால்மார்ட் அங்காடியில் ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்தபோது அந்தப்பகுதியில் சிறிய ரக விமானம் பறந்துள்ளது. பின்னர் அங்கிருந்த ஊழியர்களை தொடர்புகொண்ட விமானி, விமானத்தின் மூலம் வால்மார்ட் அங்காடியை தகர்க்கப்போவதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பதற்றம் ஏற்பட்டதால் வாடிக்கையாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

விசாரணையில் 28 வயது இளைஞர் ஒருவர் சிறிய ரக விமானத்தை திருடி தாக்குதல் மிரட்டல் விடுப்பது தெரியவந்தது. எரிபொருள் தீரும் வரை வானில் பறப்பதாக அந்நபர் கூறிய நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பறந்தபின்னர் அந்த நபர் விமானத்தை பாதுகாப்பாக தாரையிறக்கினார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம் இன்னும் சில தினங்களில் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அதே பாணியில் விமானம் கொண்டு அங்காடியை தாக்கப் போவதாக இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது