மேத்யூ மோரிஸ் insta
உலகம்

'அம்மா.. நான் கோடீஸ்வரன்!' ஒரே மீனில் ரூ.5 கோடி பரிசை வென்ற இளைஞர்!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் புகழ்பெற்ற 'மில்லியன் டாலர் ஃபிஷ்' மீன்பிடிப் போட்டியில், 26 வயதான மேத்யூ மோரிஸ் என்ற இளைஞர் 80 சென்டிமீட்டர் நீளமுள்ள பாரமுண்டி (Barramundi) மீனைப் பிடித்து 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் பரிசை வென்றுள்ளார்.

Prakash J

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஆஸ்திரேலிய அரசால் 2015-ஆம் ஆண்டு மில்லியன் டாலர் ஃபிஷ்' (Million Dollar Fish) என்ற மீன்பிடிப் போட்டி தொடங்கப்பட்டது. அதன்படி, இந்தப் போட்டியில், தற்போதைய சீசன் 12-க்காக ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தில் உள்ள கொரொபோரி பில்லாபாங் (Corroboree Billabong) என்ற நீர்நிலையில் மொத்தம் 101 மீன்களில் குறியீடுகள் பொருத்தப்பட்டு நீரில் விடப்பட்டன. இதில் ஒரு மீனுக்கு மட்டுமே (80 சென்டிமீட்டர் நீளமுள்ள பாரமுண்டி (Barramundi))1 மில்லியன் டாலர் பரிசும், மீதமுள்ள 100 மீன்களுக்கு தலா 10,000 டாலர்கள் பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் போட்டியில், 26 வயதான மேத்யூ மோரிஸ் தனது சகோதரருடன் கலந்துகொண்டார். அப்போது, 1 மில்லியன் டாலருக்கான பிரத்யேக சிவப்பு நிறக் குறியீடு (Red-tag) பொருத்தப்பட்ட 80 சென்டிமீட்டர் நீளமுள்ள பாரமுண்டி மேத்யூ பிடித்துள்ளார். இதன்மூலம் அவர், 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் பரிசை வென்றுள்ளார்.

இந்தப் போட்டியின் 12 ஆண்டுகால வரலாற்றில், இந்த மாபெரும் முதல் பரிசை வெல்லும் இரண்டாவது நபர் மேத்யூ ஆவார். இதற்கு முன்பாக, 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கீகன் பெய்ன் (Keegan Payne) என்ற 19 வயது இளைஞர் முதன்முறையாக இந்த 1 மில்லியன் டாலர் குறியிடப்பட்ட மீனைப் பிடித்து முதல் நபராக வரலாற்றுச் சாதனை படைத்திருந்தார். சீசன் 12க்கான ஒரேயொரு ஒரு மில்லியன் டாலர் மீன் இப்போது பிடிக்கப்பட்டிருந்தாலும், போட்டி இன்னும் முடிவடையவில்லை. தலா 10,000 ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள, குறியிடப்பட்ட மேலும் 96 பாராமுண்டி மீன்கள் வடக்குப் பிரதேசம் முழுவதும் விடப்பட்டுள்ளன. இந்த சீசன் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வடக்குப் பிரந்திய அரசாங்கத்தின்படி, இந்தப் போட்டி தொடங்கியதிலிருந்து 2.47 மில்லியன் ஆஸ்திரேலிய டாலருக்கும் அதிகமான பரிசுத்தொகை வழங்கியுள்ளது.

பரிசுத்தொகை பெற்றது குறித்து மேத்யூ, இது நம்பமுடியாததாக இருக்கிறது. நான் ஒரு கனவில் இருப்பதுபோல உணர்கிறேன். ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள மீனைப் பிடித்ததை என்னால் நம்பவே முடியவில்லை” எனத் தெரிவித்துள்ள அவர், இந்த வெற்றியை தனது அம்மாவை அழைத்து பகிர்ந்துள்ளார். மேலும் அவரிடம், “நான் ஒரு கோடீஸ்வரன் ஆகிவிட்டேன் அம்மா.. ஆனால் இதை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.