உலகம்

குவைத்தில் குடியேற்ற மசோதாவுக்கு ஒப்புதல்: 8 லட்சம் இந்தியர்களின் நிலை என்ன?

குவைத்தில் குடியேற்ற மசோதாவுக்கு ஒப்புதல்: 8 லட்சம் இந்தியர்களின் நிலை என்ன?

webteam

வெளிநாடு வாழ் மக்கள் எண்ணி்க்கையை குறைக்கும் குவைத் அரசின் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்து போய் நிற்கிறது. இதனால் பல தொழில் நிறுவனங்கள் தங்களின் வருவாயை இழந்துள்ளனர். பல்வேறு நாடுகள் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளது. அவற்றை மீண்டும் முன்னோக்கி எடுத்துச்செல்ல பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசுகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக குவைத் அரசு தற்போது ஒரு முக்கிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதாவது வெளிநாடு வாழ் மக்கள் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மசோதாவை நிறைவேற்றியுள்ளது. வளைகுடா நாடான குவைத்தில் 30 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர். அதில் 12 லட்சம் இந்தியர்களும் உள்ளனர். சமீபத்தில் குவைத் நாட்டு பிரதமர், ஷேக் ஷபாப் அல் காலித் அல் ஷபாப் கூறுகையில் "எங்கள் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் மக்கள் தொகையை 70 சதவீதத்திலுருந்து 30 சதவீதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, வெளிநாட்டினர் மக்கள் தொகையை குறைக்கும் வகையில் குடியேற்ற ஒதுக்கீடு வரைவு மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த மசோதாவுக்கு குவைத்தின் தேசிய நடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா இனிமேல் உயர்மட்டக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

இந்த மசோதாவின்படி குவைத்தில் 15 சதவீதம் இந்தியர்கள் மட்டுமே வசிக்க வகை செய்யும். அதாவது, குவைத்தில் உள்ள 12 லட்சம் இந்தியர்களில் 8 லட்சம் பேர் தாயகம் திரும்பவேண்டிய நிலை உருவாகும். இந்த மசோதா குறித்து குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தரப்பில் எந்தவிதமான கருத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.