Houthi attack Reuters
உலகம்

24 மணி நேரத்தில் 8 எச்சரிக்கைகள்.. சவுதியை உலுக்கிய ஹவுதி தாக்குதல்கள்!

சவுதி பாதுகாப்பு அமைப்புக்கு புதிய சவால்: ஹவுதி கிளர்ச்சிப் படைகள் தொடர்ந்த தாக்குதல்கள்

PT WEB

சவுதி அரேபியாவின் முக்கிய மின் நிலையம் மற்றும் துறைமுகங்கள் மீது ஹவுதி கிளர்ச்சிப் படைகள் நடத்திய தாக்குதல்கள், மின்சாரத் தடை மற்றும் கட்டமைப்பு சேதங்களை ஏற்படுத்தி பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. சவுதி ராணுவம் ஏவுகணைகளை இடைமறித்து அழித்தாலும், இந்த தாக்குதல்கள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளன.

செய்தியாளர் - M.மீரா

மத்திய கிழக்கில் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிப் படைகள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, சவுதியின் முக்கிய மின் நிலையம் மற்றும் துறைமுகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Houthi attack

ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிப் படைகள், சவுதியின் செங்கடல் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள அல்-ஷைக் மின் நிலையம் மற்றும் ஜிசான் துறைமுகத்தைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளன. இந்தத் தாக்குதலால் சவுதியின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும், முக்கியக் கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஹவுதிகள் ஏவிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி ராணுவம் இடைமறித்து அழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஏவுகணைகளின் சிதைவுகள் அல்-ஷைக் பகுதியில் விழுந்ததாக சவுதி தலைமையிலான கூட்டுப் படைகளின் செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மாலிக்கி தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் முக்கியமான பதிலடி நடவடிக்கை இருப்பதாக ஹவுதிகள் கூறுகின்றனர். சமீபத்தில் ஏமனின் சாடா மற்றும் மொகா பகுதிகளில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மீது சவுதி தாக்குதல் நடத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஹொடைடா துறைமுகத்தில் உள்ள ஒரு பகுதி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதற்குப் பதிலடியாகவே சவுதியின் மின் நிலையம் மற்றும் துறைமுகம் குறிவைக்கப்பட்டதாக ஹவுதி செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரி விளக்கம் அளித்துள்ளார்.

saudi vs houthi

ஏமன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டால், சவுதியின் துறைமுகங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீதும் நேரடித் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் 24 மணி நேரத்திற்குள் சவுதி அரேபியாவில் எட்டு முறை அவசர எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. தலைநகர் ரியாத்தை நோக்கி வந்த மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், தெற்கு சவுதியை நோக்கி வந்த ஹவுதி ட்ரோன் ஒன்றை அழித்ததாகவும் சவுதி தலைமையிலான கூட்டுப் படைகள் தெரிவித்துள்ளன.

இந்தத் தொடர் தாக்குதல்கள் சவுதியின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு புதிய சவாலாக மாறியுள்ளன.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்காக இதுவரை 48.3 பில்லியன் டாலர் செலவாகியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான புதிய தாக்குதல்கள் குறித்து புத்தாண்டுக்குப் பிறகு முடிவெடுக்கலாம் என டிரம்ப் கூறியுள்ள நிலையில், சவுதி மீதான ஹவுதிகளின் தாக்குதல் அமெரிக்காவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.