DANA Effect in Spain Reuters
உலகம்

ஸ்பெயின்: வெள்ளத்தில் மிதக்கும் 78 நகரங்கள்.. வெளிப்பட்ட இயற்கையின் கோரம்.. டானா விளைவால் பேரழிவு!

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட புயல் காரணமாக 78 நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

ஸ்பெயினில் 'டானா' புயலின் விளைவாக வலென்சியா மற்றும் அலிகாண்டே பகுதிகளில் 700 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்து 78 நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 15 பேர் உயிரிழந்த நிலையில், 10,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். குளிர்ந்த மற்றும் ஈரப்பதமுள்ள காற்று மோதலால் உருவான இந்த புயல், கடும் பேரழிவை ஏற்படுத்தியது.

ஸ்பெயினின் கிழக்குப் பகுதியான வலென்சியா (Valencia ) மற்றும் அலிகாண்டே (Alicante) மாகாணத்தில் கடந்த 4 நாட்களாக ஆடம் புயலால் பெருமழை கொட்டித் தீர்த்தது. சில பகுதிகளில் 48 மணி நேரத்தில் 600 முதல் 700 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ள நிலையில், வலென்சியாவின் பெகோ (Pego) மற்றும் ஒலிவா (Oliva) போன்ற பகுதிகளில் 36 முதல் 48 மணி நேரத்திற்குள் 700 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை கொட்டித் தீர்த்தது.

இதன் காரணமாக அந்த பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சென்றது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறுகிய காலத்தில் பெய்த இந்த அதி கனமழையால் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம், கிராமப்புற மற்றும் நகரப் பகுதிகளை நொடிப்பொழுதில் மூழ்கடித்தது. இந்த புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், ஸ்பெயின் மட்டும் 78 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போனவர்களை மீட்புப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

'டானா' (DANA - Depresión Aislada en Niveles Altos) எனப்படும் வளிமண்டலக் மேலடுக்கு சுழற்சி நிகழ்வே இந்த பேரழிவுக்கு முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. துருவப் பகுதிகளிலிருந்து வளிமண்டலத்தின் உயர் அடுக்குக்கு வரும் குளிர்ந்த காற்று, மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வரும் வெப்பமான ஈரப்பதம் நிறைந்த காற்றோடு மோதும்போது அங்கு காற்றில் மாபெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இந்த இரண்டு காற்றுகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து மாபெரும் ஒரு காற்று சுழற்சியாக உருவெடுக்கிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளின் கடல் பகுதியில் நடக்கும் இந்த நிகழ்வே டானா (DANA) விளைவு என்று அழைக்கப்படுகிறது. இந்த டானா விளைவால் உருவாகும் சுழற்சி அதிதீவிரக் காற்றையும், பேரழிவு தரும் மழை மேகங்களையும் ஏற்படுத்தும் அளவிற்குச் சக்திவாய்ந்ததாக மாறும்போது அது புயல் என வகைப்படுத்தப்படுகிறது.

வழக்கமான கடல் புயல்கள் கடலின் மேற்பரப்பு நீர் சூடாவதால் மட்டுமே உருவாகி, நிலத்தைக் கடக்கும்போது பலமிழந்துவிடும். ஆனால் டானா விளைவால் உருவாகும் இந்த புயல்கள் கடலின் மேற்பரப்பில் மட்டும் உருவாகாமல் வளிமண்டலத்தின் மிக உயர் அடுக்கில் உருவாகி ஒரே இடத்தில் நின்று பெருமழையை கொடுத்து பெரும் அழிவுகளை ஏற்படுத்துகிறது. ஸ்பெயினில் இந்த நிகழ்வால் இதற்கு முன்னர் கடந்த 2024-ம் ஆண்டு இப்படி ஏற்பட்ட வெள்ளத்தில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.