உலகம்

இருக்க இடமில்லை; காரிலேயே வாழ்க்கை...- முன்னாள் மாணவரால் ஆசிரியருக்கு கிடைத்த அன்பு பரிசு!

இருக்க இடமில்லை; காரிலேயே வாழ்க்கை...- முன்னாள் மாணவரால் ஆசிரியருக்கு கிடைத்த அன்பு பரிசு!

webteam

இருக்க இடமில்லாமல் தனது காரில் வசித்து வந்த ஓர் ஆசிரியருக்கு, அவரின் முன்னாள் மாணவர்களிடமிருந்து 27,000 டாலர் (ரூ.20 லட்சம்) பிறந்தநாள் பரிசு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஜோஸ் வில்லர்ரூயல். உலகத்தை புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று ஜோஸையும் விட்டு வைக்கவில்லை. அவரும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்ப நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன.
இதனால், தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆசிரியர் ஜோஸூக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஏற்கெனவே பல வருடங்களாக இருக்க இடமில்லாமல் தனது காரில் வசித்து வந்தார். அவர் சம்பாதித்த குறைந்த வருமானத்தை தனது குடும்பத்திற்கு வழங்கி வந்தார். இந்நிலையில், அவரது நிலைமையை கொரோனா மோசமாக்கியது.

செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் "மெக்ஸிகோவில் எனது குடும்பம் வசித்து வருகிறது. அவர்களுக்கு பணம் அனுப்ப வேண்டியிருப்பதால், என்னால் இங்கு வீட்டை வாடகைக்கு எடுக்க முடியவில்லை” என்று தெரிவித்தார்.

வில்லர்ரூயலின் முன்னாள் மாணவர் ஸ்டீவன் நாவா, வில்லர்ரூயல் தனது காரில் இருந்து பொருட்களை மீட்டெடுப்பதைப் பார்த்ததுள்ளார்.

"ஒவ்வொரு நாளும் நான் அதிகாலை 5 மணியளவில் வேலைக்குச் செல்வேன். அப்போது ஆசிரியரைப் பார்த்தேன். அவருக்கு உதவி செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்" என்கிறார் நாவா.

தன் முன்னாள் ஆசிரியருக்கு உதவ, முடிவு செய்தார் மாணவர் நாவா. GoFundMe என்ற நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கி அதன் மூலம் வெறும் 6 நாட்களில் 27 ஆயிரம் அமெரிக்க டாலரையும் திரட்டியுள்ளார்.

"ஆசிரியர் வில்லர்ரூயல் ஒரு சிறந்த ஜாலியான - பயனுள்ள கல்வியாளர். கோவிட் பெருந்தோற்றால் அவரது பொருளாதாரம் சீர்குலைந்தது. கடுமையான வானிலை நாட்களில் கூட அவரது காரில் வாழ்ந்து வருகிறார்" என்பதை குறிப்பிட்டு, அவர் நிதி திரட்டியுள்ளார்.

நவா வியாழக்கிழமை நன்கொடைகளில் இருந்து ஈட்டப்பட்ட, 27 ஆயிரம் டாலர் காசோலையை வில்லர்ரூயலுக்கு வழங்கினார். அன்று வில்லார்ருவலின் 77 வது பிறந்தநாள்.

`இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை’ என்று மகிழ்ச்சியில் பூரித்துள்ளார் ஆசிரியர் வில்லர்ரூயல்.