உலகம்

72 இருக்கைகள் கொண்ட நேபாள விமானம் விபத்து! பயணிகள் நிலை என்ன?

Rishan Vengai

நேபாளத்தில் உள்ள பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் 72 இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து 68 பயணிகள் மற்றும் 4 க்ரூவ் நபர்களுடன் பயணித்த விமானம், பொக்காரா சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் இருந்த பயணிகளின் நிலை என்னவாயிற்று என்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

நேபாளத்தின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சீஏஏஎன்(CAAN) படி, எட்டி ஏர்லைன்ஸ் விமானமான 9N-ANC ATR-72 என்ற விமானம் காத்மாண்டுவில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காத்மாண்டுவில் இருந்து பொக்காரா விமான நிலையம் சென்ற போது விமானம் விபத்துக்குள்ளாகிய நிலையில், இடிபாடுகளில் எரியும் அதிகமான தீயின் காரணமாக மீட்புப் பணிகள் தடைபட்டுள்ளதாக நேபாள ஊடகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வெளியிடப்பட்டிருக்கும் தகவல்களின்படி, இடிபாடுகளில் இருந்து குறைந்தது 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

எட்டி ஏர்லைன்ஸின் விமானங்கள் விபத்துக்குள்ளாவது இது முதல் முறையானது இல்லை என்றும், கடந்த காலங்களிலும் சில பெரிய விபத்துகளில் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றும் எட்டி ஏர்லைன்ஸ் ஆனது 1998 முதல் செயல்பட்டு வருகிறது.