மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பல்வேறு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் உயிரிழந்ததாக, மியான்மர் இஸ்லாமியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ கடந்ததாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே-யில் கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதில், ஏராளமான வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாகின. இதில் பலியானோரின் எண்ணிக்கை ஆயிரத்து 700-ஐ கடந்துள்ளது. மூவாயிரத்து 400 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
காணாமல் போன 300 பேரை மீட்புப் படையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் மியான்மருக்கு உதவிகளை வழங்கி வருகின்றன.
இந்தசூழலில், சீனாவைச் சேர்ந்த மீட்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், கர்ப்பிணி உள்ளிட்ட மூன்று பேர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், 60 மசூதிகள் தரைமட்டமானதாகவும், அங்கு தொழுகைகளில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் உயிரிழந்ததாகவும் மியான்மர் இஸ்லாமியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.